பைரஸி பிரச்சினை சினிமா தொழிலையே ஆட்டம் காணவைக்கும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது. படம் வெளியாகும் நாளிலேயே படத்தை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், தற்போது படம் வெளியாவதற்கு முன்னரே படங்களை வெளியிட்டு திரைத்துறைக்கு அச்சுறுத்தலைக் கொடுத்துவிட்டது. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டாக்ஸி வாலா படத்தை ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், அதுபோலவே சுயாதீன படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
மென்பொருள் துறையில் பொறியாளராகப் பணியாற்றிவரும் கார்த்திக் கோபால், சினிமா மேல் கொண்ட ஆர்வம் காரணமாக நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை இயக்கிவந்தார். அடுத்த கட்ட நகர்வாக திரைப்படம் எடுப்பதற்கு முன்பு ‘பைலட்’ படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டார். வறியவன் என்ற தலைப்பில் திரைக்கதைப் பணிகளை முடித்துவிட்டு 2015ஆம் ஆண்டு படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கினார். விடுமுறை நாள்களில் மட்டும் படப்பிடிப்பை நடத்தி மூன்று ஆண்டுகளில் படத்தை நிறைவு செய்தார்.
படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டபோது, முதலாவதாக அமேசான் தளத்தில் பத்து நாள்களுக்கு முன்னதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிட்டனர். இந்தியாவில் வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் தளத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்தியாவில் படத்தை வெளியிட மூன்று நாட்கள் இருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து யூ-டியூப் தளத்திலும் படம் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. யூ டியூப் நிர்வாகத்துக்குப் புகார் அனுப்பி அதை நீக்கிவிட்டாலும், தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளதை நீக்க முடியவில்லை. இதனால் படத்தை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள் முதல் சிறு தயாரிப்பாளர்கள் வரை தமிழ் ராக்கர்ஸ் குழுவினரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பைரஸியை தடுப்பதற்காகத் திரையரங்குகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என்பன போன்ற சில நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டாலும், சட்ட விரோதமாகப் படங்கள் வெளியாவதை யாராலும் தடுக்கமுடியவில்லை.�,