தாயைக் கொலை செய்தது போல் என்னுடைய தந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டினேன் என்று தஷ்வந்த் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த்(24) என்ற மென்பொறியாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். சிறுமி கொலை, பலாத்காரம் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்த்து அவரது தந்தை சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி காலை தஷ்வந்தின் தாயார் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த தஷ்வந்த் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் தப்பியோடினார்.
தஷ்வந்தைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். தஷ்வந்தின் செல்பேசியை காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கினர். மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை டிசம்பர் 6 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
தஷ்வந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பின்னர் அழைத்துச் செல்லும்படி கூறினர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தஷ்வந்தை ஆஜர்படுத்தினர். தஷ்வந்த்தை சென்னை அழைத்துச் செல்ல மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்தது. டிசம்பர் 9ஆம் தேதிக்குள் தஷ்வந்த்தை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கொண்டுவர மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, காவல்துறை பிடியிலிருந்து தப்பினார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரைத் தேடிவந்த நிலையில், அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்வந்தை மீண்டும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையடுத்து, மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்தைக் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, காவல்துறை காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து தஷ்வந்தை விமானம் மூலம் நேற்றிரவு 10.15 மணிக்குச் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாயை கொலை செய்த தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. தாயார் அடிக்கடி திட்டியுள்ளார். செலவுக்கு பணம் தரவும் மறுத்துள்ளார் என்று தஷ்வந்த் கூறியுள்ளார்.
அவர் கொலை செய்யப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் கோயம்பேட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்திடம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்தது. இதையடுத்து
செங்கல் பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தஷ்வந்த் மீது இருசக்கர வாகன திருட்டு, சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துகொன்ற வழக்கு, சரளாவை கொலை செய்த வழக்கு மற்றும் மும்பையில் காவல்துறையினரை தாக்கிவிட்டுத் தப்பிய வழக்கு ஆகியவை உள்ளதால், அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாயைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய தஷ்வந்த், 16 சவரன் நகைகளை டேவிட் என்பவரிடம் கொடுத்துவிட்டு ரூ.40,000 பணம் பெற்றுக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூருவுக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பை தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் தஷ்வந்த் மும்பை தப்பி செல்ல உதவியதாக அவரது சிறை நண்பர்கள் டேவிட், தாஸ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.�,