பேனர் வைக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி வாங்கிய விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட பலரும் பலியாகியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் டெங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 6) சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைக் கூட இந்த அரசு வெளியிடவில்லை. மர்மக் காய்ச்சல் வந்துவிட்டதாக தவறான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ‘கொசு கடிக்கும்வரை உள்ளாட்சித்துறை பொறுப்பு; கடித்தபின்தான், சுகாதாரத்துறை பொறுப்பு’ என்று சொல்லியிருக்கிறார். இது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலினிடம், அமைச்சர்கள் நாங்குநேரி பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் சுகாதாரத் துறை அமைச்சராவது பணியை கவனிக்கலாமல்லவா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“இது விஜயபாஸ்கரிடம் கேட்க வேண்டிய கேள்வி. அவர் இதைப் பற்றி கவலைப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் கவலைப்படாத ஒரு ஆட்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே, எதிர்க்கட்சித் தலைவராக பாதிக்கப்பட்டவர்களை பார்த்துவிட்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்களிடம் வலியுறுத்தினேன்” என்று பதிலளித்தார் ஸ்டாலின்.
நீட் ஆள்மாறாட்டம் குறித்து பேசியவர், “சிபிஐ விசாரணை நடத்தினால்தான் இதுதொடர்பான உண்மை வெளிவரும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற இந்த அரசு, ஏன் நீட் தேர்வு விவகாரத்திற்கு செல்லவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.�,