மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“கடந்த இரண்டு நாட்களாகப் புதுவையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தார் டிடிவி தினகரன். அங்கே சுமார் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்துவருகிறார். அந்த மாடுகளுக்கு நேற்று மாட்டுப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடினார். இன்று காலையில் புதுவையிலிருந்து கிளம்பியவர் சேலம் வழியாகக் கொடநாட்டை நோக்கிப் புறப்பட்டார். சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே தினகரனை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தார்கள். உளுந்தூர்பேட்டையில் தினகரனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பற்றி நாம் மின்னம்பலத்தின் 1 மணிப் பதிப்பில் எழுதியிருக்கிறோம். ‘தனிக்கட்சி தொடங்குவது பற்றி நாளை முடிவு செய்வோம். சசிகலாவிடம் பேசிவிட்டேன். உனக்கு எது சரியனெப் படுகிறதோ அதைச் செய் என அவர் சொல்லிவிட்டார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என உளுந்தூர்பேட்டையில் சொன்னார் தினகரன்.
ஆர்.கே.நகரில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான பிறகு இரண்டு முறை பரப்பன அக்ரஹரா சிறைக்குச் சென்றார். ஆனால், இரண்டு முறையுமே தினகரனுடன் பேசவில்லை சசிகலா. சின்னம்மா மௌன விரதத்தில் இருக்கிறார் என்று சொல்லிச் சமாளித்தார் தினகரன். அப்படி இருக்க.. சசிகலா எப்போது தினகரனிடம் அப்படிச் சொன்னார் என்ற கேள்வியும் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து தினகரன் போட்டியிட வேண்டாம் என நினைத்த சசிகலா, எப்படி அதிமுகவை எதிர்த்து ஒரு கட்சி தொடங்க தினகரனுக்கு அனுமதி கொடுப்பார் என்று கேட்பவர்களும் உண்டு.
நாளை மாவட்டச் செயலாளர்களுடன் பேசி முடிவெடுக்கப் போவதாக தினகரன் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாகப் பேசிய தினகரன் ஆதரவாளர்கள் சிலர், ‘கொடநாட்டுக்குச் செல்லும் வழியில் கோத்தகிரியில் அம்மா திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. அம்மா கொடநாட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அந்தச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அந்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு எம்.ஜி.ஆர். பிறந்தநாளான நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகத்தான் கொடநாட்டை நோக்கிக் கிளம்பியிருக்கிறார். நாளை எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப் போகிறார். தனிக்கட்சி என்பது அவரது இப்போதைய முடிவு இல்லை.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்றுவோம் என தினகரன் இதுவரை சொல்லிவந்தார். அதனால்தான் தொண்டர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். இப்போ அவரு தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னால், எவ்வளவு பேரு அவரோடு நிற்பாங்கன்னு தெரியாது. இது அவருக்கும் தெரியாமல் இல்லை. தனிக்கட்சி என்பதெல்லாம் சரிப்பட்டு வரவே வராது. ‘ஆர்.கே.நகரில் நாம குக்கர் சின்னத்துல நின்னு ஜெயிச்சுட்டோம். அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் நாம சுயேச்சையாக போட்டியிட்டால், தொகுதிக்கு ஒரு சின்னம் கிடைக்கும். அதை மக்கள் மனசுல பதிய வைக்கிறது கஷ்டமாக இருக்கும். அதனால், எல்லா தொகுதிக்கும் ஒரே சின்னம் வாங்க என்ன செய்யலாம்னு யோசிக்கணும். அதுக்கு கட்சியாக இல்லை என்றாலும் ஒரு பேரவையாகக்கூடத் தொடங்கலாம். அது சம்பந்தமாக நாம் எல்லோரும் பேசி முடிவு செய்யலாம்’ என மாட்டுப் பொங்கல் அன்று சொல்லியிருக்கிறார் தினகரன். இதைத்தான் நாளை அவர் ஆலோசனை செய்யப் போகிறார்’ என்று சொன்னார்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து , ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
“கோத்தகிரியிலிருந்து கொடநாடு எஸ்டேட்வரை போய் வரலமா என்ற யோசனையிலும் இருக்கிறாராம் தினகரன். கொடாநாடு எஸ்டேட்டுக்குள் நேரடியாகச் செல்வதில் சில சட்டச் சிக்கல் இருந்தாலும், கொடநாடு எஸ்டேட்டை ஒட்டி ஜெயலலிதா இருந்தபோது வாங்கிய கர்சன் எஸ்டேட்டுக்குள் செல்ல எந்த சிக்கலும் இருக்காது என்பதால், அங்கே செல்லலாம் என்பது தினகரனின் திட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால்,இதுவரை தினகரன் இது சம்பந்தமாக யாரிடமும் பேசவில்லையாம்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
�,