ஏர் இந்தியா நிறுவனம் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் அதனுடைய 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை விற்று நிதி திரட்ட முடிவெடுத்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதனால் தன்வசமுள்ள சொத்துகளை விற்று இழப்புகளைச் சமாளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்துகளை விற்க அளிக்கப்பட்ட ஒப்புதலின்படி, 2014 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதத்துக்குள் சொத்து விற்பனை மூலம் ரூ.5,000 கோடியைத் திரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமாக உள்ள 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் வணிக வளாகங்களையும் ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்று ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை நிதி திரட்டத் தீர்மானித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். ஏர் இந்தியா நிறுவனம் தற்போது ரூ.55,000 கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது. இந்நிறுவனத்துக்கு 2016-17 நிதியாண்டில் மட்டும் ரூ.47,145 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புனே, அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் இருந்த 14 வகையான சொத்துகளை கடந்த மாதம் விற்பனை செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.�,