சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது டிவி உற்பத்தியை விரைவில் நிறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரியாவைச் சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான *சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ்*, இந்தியாவில் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்னணு சாதனங்களையும் மொபைல் போன்களையும் அதிகளவு விற்பனை செய்து வருகிறது. இந்திய அரசின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தியை மேற்கொண்டுவரும் சாம்சங், இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை காரணமாகத் தனது டிவி உற்பத்தியை நிறுத்தவுள்ளது. டிவி உற்பத்திக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை இந்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதன் விளைவாக, சென்னையில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் டிவி உற்பத்தியை மேற்கொண்டு வரும் சாம்சங், அங்கு உற்பத்தியை நிறுத்தவுள்ளதாகப் பெயரை வெளியிட விரும்பாத சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனது ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் டிவிகளை சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்துவந்தது. இங்கு உற்பத்தியை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வியட்நாம் நாட்டில் உற்பத்தி செய்த டிவிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொபைல் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருப்பதாலும் டிவி உற்பத்தியை நிறுத்த சாம்சங் முடிவெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 6.8 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கையை 12 கோடியாக உயர்த்தப்போவதாகச் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தது.�,