நந்தினி மெகா தொடரின் கதைத் திருட்டு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான வேல்முருகன் தொடர்ந்த வழக்கில், இயக்குநர் சுந்தர்.சியிடம் விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் நந்தினி. இதை இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ளார். இந்தக் கதை தன்னுடையது என்றும், கதைக்குப் பணம் தருவதாகக் கூறிப் பெற்றுக்கொண்ட சுந்தர்.சி பின்னர் பணம் தராமல், தன் பெயரையும் குறிப்பிடாமல் மோசடி செய்துவிட்டதாக இயக்குநரும் நடிகருமான வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
மேலும், அதற்கு ஈடாக ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு சுந்தர்.சிக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வேல்முருகன் “நீதிமன்றம் என் வழக்கை ஏற்றுக்கொண்டு, சுந்தர்.சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்பக்கம் நியாயம் உள்ளது. ஆதாரம் உள்ளது. அனைத்தையும் நான் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்” என்று கூறி வந்தார்.
ஆறு மாத காலமாக நடந்துவந்த இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று (டிசம்பர் 18) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் சுந்தர்.சியிடம் போலீஸார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் வேல்முருகனை தொடர்புகொண்டு நாம் பேசிய போது, “சுந்தர்.சியைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போதுதான் நான் ஆறு மாத காலமாகப் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்ததுபோல இருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. ஆனாலும் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதையெல்லாம் எதிர்கொள்கிறேன். நந்தினி தொடருக்காக அவர் எனக்கு அளிப்பதாகக் கூறிய 50 லட்சம் ரூபாயை நீதிமன்றமும் காவல்துறையும் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
�,