சா.வினிதா
பட்டாசு தீர்ப்பு: உற்பத்தியாளர்கள், பயனர்களின் எதிரொலி!
தீபாவளி நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணியிலிருந்தே சில இடங்களில் பட்டாசு சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும். காலை 4 மணியிலிருந்து வெடிச் சத்தம் காதைக் கிழிக்கும். அப்படி நாள் முழுக்க பட்டாசு வெடித்துவந்த மக்கள் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு மக்களிடையே வருத்தத்தை மட்டுமில்லாமல், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள், மீம்ஸ் ஆகியவை மூலமாகத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதே பட்டாசு வெடிப்பதற்குத்தான் என்கிறபோது அதில் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மணிக்கொடி. “இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, காலப்போக்கில் தீபாவளி என்ற பண்டிகையை கொண்டாடக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணிக்கொடி.
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இங்கேயுள்ள மக்கள் சிறிதும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்தத் தீர்ப்பை ஒரு பொருட்டாக மக்கள் பார்க்கவில்லை” என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர் அருண். இங்குள்ள மக்கள் காலையிலிருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவர்களைப் போய், இரண்டு மணி நேரம் மட்டும்தான் வெடிக்க வேண்டும் என நிர்பந்திப்பது நல்லதல்ல என அவர் கூறுகிறார்.
இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கிவிட்டது உச்ச நீதிமன்றம், அதை அவர்களால் கண்காணிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறார் சேலத்தைச் சேர்ந்த பெருமாள். “சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் வேண்டுமானால் மக்கள் கண்காணிக்கப்படலாம். கிராமங்களில் யார் கண்காணிக்க முடியும். இவர்கள் சொன்ன தீர்ப்பு யாருக்கும் ஒத்துவராது” என்கிறார் அவர்.
“இரண்டு மணி நேரம் மட்டும் வெடிக்கலாம் என்ற தீர்ப்பு நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது. ஏனெனில், மக்கள் பட்டாசுகளையெல்லாம் ஆர்டர் செய்து வாங்கி விட்டனர். அதனால், எங்களுக்கு விற்பனையில் எந்த வித பாதிப்பும் இல்லை. அதை விலை கொடுத்து வாங்குகிற மக்கள் இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க மக்களுக்குத்தான் ஏமாற்றத்தை தரக் கூடியதாக இருக்கும்” என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர் கெங்கேஸ்வரன்.
சுற்றுச்சூழல், பெரியவர்கள், விலங்குகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு பார்க்கும்போது இந்தத் தீர்ப்பு சரியாக உள்ளது என்றே சொல்லலாம் என்று ஒப்புக்கொள்கிறார் சென்னைவாசி, பாரதி. “ஆனால், தீபாவளி என்பது ஒருநாள் மட்டும்தான் கொண்டாடக்கூடியது. அந்த ஒரு நாளில் வெடிக்கும் பட்டாசுகளால் மாசு அதிகளவில் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கட்டுப்பாடு தேவையற்றது. இந்தத் தீர்ப்பு குழந்தைகளுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக அமைந்துள்ளது” என்கிறார் பாரதி.
“ஒரு நாளை மட்டும் நினைவில்கொண்டு நம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் மாற்றம்தான் காலத்தின் மாற்றமாக இருக்கும்” என விளக்குகிறார் பேராசிரியர் ராஜாஜி. சென்னை பெட்ரிஷியன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறார். “இந்தியா மிகவும் நெருக்கமாக மக்கள் வாழும் நாடு. இந்தியாவைப் போன்று ஆறு மடங்கு பெரிய நாடான ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இரண்டரைக் கோடி மட்டுமே. இந்தியாவின் மக்கள் தொகையோ 130 கோடியைக் கடந்துள்ளது. எனவே, நோய் நொடிகள் சார்ந்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இங்கு அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காலவரையின்றி பட்டாசு வெடிப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும்” என்கிறார் பேராசிரியர்.
மாசுபாட்டைக் குறைப்பதற்கு மாற்று வழி ஏற்படுத்துவதை விட்டுவிட்டு நேரத்தைக் குறைப்பது நல்லதல்ல. பட்டாசுகளில் சேர்க்கப்படுகிற வேதிப் பொருட்களின் வீரியத்தைக் குறைக்கலாமே தவிர, பட்டாசு வெடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கித் தருவது சரியல்ல என்கிறார் மணிக்கொடி. பட்டாசு எவ்வளவு நேரம் வெடிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இதில், நேரத்தை ஒதுக்கி அதில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறுவது முற்றிலும் தவறு என்கிறார் அவர்.
உச்ச நீதிமன்றம் விதித்த நேரத்தின்படி பட்டாசு வெடிப்பதினால் எந்த வித விளைவும் ஏற்படாது என்று எவ்வாறு உறுதி செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் பெருமாள். இரண்டு மணி நேரம் மட்டும் வெடிக்க வேண்டும் எனக் கூறியதால், மக்கள் பட்டாசுகள் அனைத்தையும் மொத்தமாகச் சேர்த்து வைத்து வெடிக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வெடிக்கும்போது அருகிலிருக்கும் மற்றவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கிறார் பெருமாள்.
அது மட்டுமில்லாமல், அனைவரும் ஒரே நேரத்தில் பட்டாசுகளை வெடிக்கும்போது, அதிக அளவிலான மாசுக்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கான வாய்ப்பும் அதிகம். எதை நினைத்து இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்டதோ, அதைவிட அதிக அளவிலான மாசுபாட்டையே ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் என்கிறார் பெருமாள்.
மனிதர்களை மட்டுமில்லாது இயற்கையின் உயிர்களையும் அது பாதிக்கிறது என்கிறார் பேராசிரியர் ராஜாஜி. “விலங்குகள், பறவைகளுக்கு ஒலி மாசுபாடு பல இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது. பட்டாசு வெடித்தல், எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று தெரியாத ஒரு தலைமுறையின் பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடர்பாக முறையான குடிமைச் சமூக உணர்வை (Civic Sense) மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார். “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நவீன நாகரிக சமூகமாக இந்தியச் சமூகம் உருவெடுக்க வேண்டும் என்ற விழைவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது” எனத் தீர்ப்பை அவர் பாராட்டுகிறார்.
எனினும், மக்கள் வாழ்வியல் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
**எங்களுக்குப் பாதிப்பு இல்லை**
உச்ச நீதிமன்றம் நேரத்தில் மட்டுமில்லாமல், பட்டாசுகளிலும் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனால், எந்தக் கட்டுப்பாடுகளும் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர் பட்டாசு உற்பத்தியாளர்கள். “உச்ச நீதிமன்றம் விதித்திருக்கிற நிபந்தனைகள் அனைத்தையும் நாங்கள் ஏற்கெனவே பின்பற்றிவருகிறோம். அதனால், எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நாங்கள், குறைந்த மாசுபாடுள்ள பட்டாசுகளைத்தான் தயாரித்துவருகிறோம். சிறிய தொழிற்சாலைகளை வைத்திருக்கிற ஒரு சிலர்தான் அதிகளவிலான சத்தம் எழுப்புகிற பட்டாசுகளைத் தயாரித்து வருகின்றனர்” என்று சொல்லும் அருண், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தது வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரத்தில்தான் எங்களுக்கு அதிகளவிலான பட்டாசுகள் விற்பனையாகும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விற்பனை அதிகளவில் இருக்கிறது என்கிறார் அருண்.
தற்போது இந்த உத்தரவு உற்பத்தியாளர்களைப் பாதிக்காமல் இருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு இதனுடைய தாக்கம் இருக்கும் என்று பட்டாசு வியாபாரிகள் கருதுகிறார்கள். இந்தத் தீர்ப்பு பட்டாசுகளின் மீதான மோகத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கலாம். அதன் விளைவாக இனிவரும் காலங்களில் பட்டாசு மீது செலவிடப்படுகிற பணத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,”