பாலாஜி அந்தணர்
சிரியாவில் நடந்த குண்டு வீச்சில் பலியான குழந்தைகள், கேரளாவில் ஆதிவாசி இளைஞர் மதுவின் கொலை, விழுப்புரம் வெள்ளம்புதூரில் தலித் சிறுவன் படுகொலை, வன்புணர்வு செய்யப்பட்ட பெண்…
இந்த மூன்று நிகழ்வுகளும் உலக சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி, நீதி கோரி நிற்கின்றன. ஆனால், உலகச் சமூகமும் ஊடகங்களும் எந்தக் கொலைக்கு எவ்வளவு கண்ணீர் வடிக்கலாம், எந்தக் கொலையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று தேர்ந்து தமது இரக்கத்தையும் கருணையையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அவர்களின் இரக்கத்தையும் கருணையையும் அக்கறையையும் எந்த வகையில் சேர்ப்பது?
**எதிர்ப்பில் செயல்படும் நுண் அரசியல்**
செய்திகள் வெறுமனே செய்திகள் அல்ல. அவை பொதுச் சமூகத்தின் மனநிலையைக் கிளர்ந்தெழச் செய்ய வல்லவை. பொதுச் சமூகத்தின் மனநிலையைக் கட்டமைக்க வல்லவை. அதன் பலம் அறிந்ததால்தான், மக்களைவிட, மக்கள் இயக்கங்களைவிட, பெருமுதலாளிகள் தங்களுக்குச் சாதகமான செய்தியைக் கொண்டுசேர்ப்பதற்கும் தங்களுக்கு எதிரான செய்திகளை மறைப்பதற்கும் ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெருமுதலாளிகளின் ஊடக ஆதிக்கம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வரவால் சிறிது திகைப்பிற்குள்ளாகியிருக்கிறது. ஊடகவியலாளர்களோ குழம்பிப் போயிருக்கிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களும் பல சமயம் ஓரவஞ்சனையுடன் இயங்குவதைக் காண முடிகிறது.
சமூகத்தில் அநீதி நடக்கும்போது அநீதி இழைப்பவர்கள் மீது கோபத்தையும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கப் பலரும் விரும்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் இரக்கத்தையும் கருணையையும் வருத்தத்தையும் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஆனால், தங்களது பாதுகாப்பு, படிமம் ஆகியவை குறித்த எச்சரிக்கை உணர்வுடன் இவற்றைச் செய்கிறார்கள். எனவே, எதெதற்குக் கருணையும் கண்டனமும் தெரிவிக்க வேண்டும் என்று கவனமாகத் தேர்வுசெய்கிறார்கள்.
கடந்த ஆண்டு அனிதா என்ற தலித் மாணவியின் தற்கொலை மரணத்துக்கு நீதி கேட்டு நீட் நுழைவுத் தேர்வு விலக்கம் கோரி பொதுச் சமூகம் திரண்டது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்பதில் பொதுச் சமூகத்தின் பயனும் அடங்கியுள்ளது.
**சகல திசைகளிலும் மவுனத்தின் நிழல்**
விழுப்புரம் கொடூரத்தில் கொலையானவர்கள் தலித் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குற்றவாளிகளைப் பிடிக்க அரசும் காவல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தலித் இயக்கங்களும் செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர். கொலையானவர்கள் தலித் என்பதாலேயே வன்புணர்வுக்கு உள்ளான பெண் தலித் என்பதாலேயே அரசும் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சிகளும் பெரிதாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று தலித் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் கொடூரமான சம்பவத்தை நியூஸ் 7 சேனல் முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பியது. பெரும்பாலான ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. தலித்துகளுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகளும் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் தலித் படுகொலைகள் நடக்கிறபோதெல்லாம் இந்தக் கொடூரங்களுக்கு அரசியல் கவனமும் அரசியல் அழுத்தமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தலித்துகள் அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனங்களை யாசித்துப்பெற வேண்டியுள்ளது. இந்தக் கொலையில் தலித்துகள் கைது செய்யப்பட்டிருப்பதால் இதை தலித்துகளே செய்திருக்கலாம் என்று கருதிக் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. இத்தகைய கொடூரத்தை யார் செய்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் – அவர்கள் எந்தச் சாதியினராக இருந்தாலும் சரி.
கொலையானவர்களை தலித் என்று அடையாளப்படுத்துவதன் மூலம் எல்லாமும் சாதியாக, சாதி பிரச்சினையாக மாற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதிகமும் நீதி மறுக்கப்பட்டது தலித் மரணங்களுக்குத்தான் என்பதால் தலித்துகள் இப்படித்தான் பேச முடியும். ஏனென்றால் படுகொலைகளால், வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள்; பொதுச் சமூகத்திடம் நீதி கோரி ஏமாந்தவர்கள் என்ற நெடிய ஏமாற்ற வரலாறு தலித்துகளுக்கு உண்டு. எனவே, தலித்துகள் ஒவ்வொரு முறையும் தங்கள் கோரிக்கையை, தங்கள் தரப்பு நியாயத்தைப் பொதுச் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால், தலித்துகள் சாதிப் பதற்றத்தை உருவாக்குகிறார்கள் என்று சொல்வது பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்துவதாக இருக்கும்.,
**குழந்தைகள் கொல்லப்படும் காலத்தில்…**
பொதுச் சமூகம் படுகொலைகளுக்கு எதிராக, வன்புணர்வுகளுக்கு எதிராக, சாதி பேதமின்றி பாரபட்சமின்றி அநீதிக்கு எதிராக, படுகொலைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆளும்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
பொதுச் சமூகத்தைச் சேர்ந்த எவரும், தனது சூழல் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிக்கொண்டு படுகொலைகளை மவுனமாகக் கடந்து செல்வதில் பொருளில்லை. குழந்தைகள் கொல்லப்படும் காலத்தில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது பாவனைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அநீதிகளுக்கு இடையில் வசதியான பிரச்னைகளை மட்டும் தேர்வுசெய்து கண்டனம் தெரிவிக்காமல், எல்லா விதமான அநீதிகளுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். இது பிறருக்கான குரல் மட்டுமல்ல. நமக்கானதும்தான்.
�,”