இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசு மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்தியா டுடே ஊடகம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். இதில், தமிழக அரசுக்குச் சிறந்த சட்டம் ஒழுங்கு, சிறந்த சுற்றுலா மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்திய ஜிடிபிக்கு அதிகம் பங்களிப்பு வழங்கும் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இந்திய சராசரியைவிட வேகமாக வறுமையைக் குறைத்துவரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீடு என்பது இந்திய அளவில் இரண்டாவதாக உள்ளது.
இன்றைய தினத்தில், சிறந்த படித்த மற்றும் திறமையான வேலையாட்கள் உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. 7.2 கோடி மக்களில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள். திறமையான மனித வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை தமிழகத்தை முதலீட்டுக்கான இலக்காக மாற்றியுள்ளது.
தமிழக நலத்திட்டங்கள் மக்களை மயக்கும் திட்டங்கள் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், அவை மக்கள் ஆதரவு பெற்ற திட்டங்கள். மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டவை. குறிப்பிட்ட தேவையை இவை பூர்த்தி செய்கின்றன. டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளை இலவச மடிக்கணினி திட்டம் குறைத்துள்ளது.
மதிய உணவுத் திட்டம், மகப்பேறு திட்டம் ஆகியவை தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம், இந்திய அரசு, சர்வதேச அமைப்புகளின் பாராட்டை பெற்றவை. அனைவருக்கும் அனைத்தும் என்னும் வளர்ச்சி மாதிரியைத் தமிழகம் உருவாக்கியுள்ளது” என்று கூறினார்.�,