பியர்சன் லினேக்கர்.ச.ரே.
சென்னை எனும் பெரும் நகரம் தன்னுள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நகரம். இங்கு கோடிகளில் சம்பாதிப்பவர்களும் வாழ்கிறார்கள். வருடத்துக்கே சில ஆயிரம் சம்பாதிப்பவர்களும் வாழ்கிறார்கள். இங்கு சாலைகளில் வசிப்பவர்களும் உண்டு; பீச் ஹவுஸில் வாழ்பவர்களும் உண்டு.
சென்னையை ஒரு சுற்று சுற்றிப் பார்த்தால் அதன் அனைத்துச் சாலைகளிலும் குளிரூட்டப்பட்ட பெரும் ஹோட்டல்களைக் காணலாம். அத்தகைய ஹோட்டலின் அருகிலோ அல்லது அதே தெருவின் முனையிலோ சிறிய தட்டுக் கடைகளைக் காணலாம். வசதியிருந்தால் தலப்பாகட்டி, இல்லாதவர்கள் எங்கே சாப்பிடுவார்கள்? வேறு எங்கே? தட்டுக் கடையில்தான் .
கையில் 30 ருபாய் இருந்தால் போதும். தட்டுக் கடையில் வயிறாரச் சாப்பிடலாம். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்புறத்தில் ஒரு தட்டுக் கடை இருக்கிறது. அந்தக் கடையை நடத்துபவர் சுந்தரவல்லி. அருகிலிருக்கும் லாக் நகர் ஹவுசிங் போர்டில்தான் குடியிருக்கிறார். இதே இடத்தில்தான் சுமார் பதினைந்து ஆண்டுகளாகக் கடை வைத்திருக்கிறாராம். தோசை இரண்டு ரூபாய்க்கு விற்ற காலத்திலிருந்தே கடை வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
மாலை ஐந்து மணி முதல் இரவு பன்னிரண்டு மணி வரை வியாபார நேரம். இட்லி, முட்டை தோசை, போட்டி கறி, பீஃப் ஃபிரைதான் இக்கடையில் அனைவரும் விரும்பி, கேட்டு வாங்கிச் சாப்பிடும் உணவுகள். இங்கு வாடிக்கையாளர்கள் தினக் கூலித் தொழிலாளர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், தட்டு ரிக்ஷா ஓட்டுபவர்கள்.
தட்டுக் கடையை நம்பியிருப்பவர்கள் இப்படிப்பட்ட சாமானிய மக்கள்தான். இதுபோன்ற கடைகளை நடத்தும் சுந்தரவல்லிகள்தான் சாமானிய மக்களின் மனதையும் வயிற்றையும் ஒருசேர நிறைத்து அனுப்புகிறார்கள். இது வியாபாரம், லாபம், நஷ்டம் என்பதைத் தாண்டி அன்புப் பரிமாற்றமாகவும் உள்ளது. மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் அங்கு சாப்பிட வரும்போது, “என்னடா காக்கா முட்டைய காணோம்? இன்னுமா பீச்சுலயே இருக்கான்?” என்று கேட்டபடியே உணவை எடுத்து வைக்கிறார் சுந்தரவல்லி. “ஆமா… நீ அம்மாகிட்ட ஒழுங்கா சம்பளமே கொடுக்குறது இல்லையாமே… ஒழுங்கா இரு. நீதான் அவள நல்லா பாத்துக்கணும்” என்று உரிமையுடன் கண்டிக்கவும் செய்கிறார்.
“காலையில மார்க்கெட்டுக்குப் போயி கடைக்குத் தேவையான சாமானெல்லாம் வாங்கிட்டு வந்துருவேன். ஊற வெச்ச அரிசி, உளுந்தை அரைச்சி அன்னிக்கு நைட்டுக்கு ரெடி பண்ணிருவேன். எல்லா விலையும் ஏறிப்போச்சி. ஆனா விலையை நம்மளும் ஏத்துனா ஜனங்க ஏமாந்துரும். அதனாலதான் ரொம்ப நாளா விலைய ஏத்தாம வெச்சிருக்கேன்” என்கிறார் சுந்தரவல்லி .
இந்தக் கடையில் வரும் வருமானத்தை வைத்துத்தான் தன் மூன்று பெண்களை வளர்த்திருக்கிறார். அதில் இருவருக்குக் கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்.
“நான் எல்லாத்துக்கும் நல்லதுதான் நினைப்பேன். அதனால எனக்கு நல்லதுதான் நடக்கும். காசு இல்லாம எத்தனையோ பேரு வருவாங்க, சாப்பிடுவாங்க. ஒரு நாளைக்கு காசு இல்லாம வர்ற பத்து பேருக்காவது சும்மா கொடுத்துருவேன். அதுல எனக்கு ஒரு திருப்தி. தண்ணி அடிச்சிட்டு காசு தராமல் சண்டை போடுறவங்களும் உண்டு. கணக்கு வெச்சி சாப்பிட்டு, மாசமானா கரெக்டா பணம் கொடுக்குறவங்களும் உண்டு. எனக்குக் கஷ்டம் வர்றப்ப தண்டலுக்கு வாங்கி வியாபாரம் பாத்து கொஞ்ச கொஞ்சமா கடனை அடச்சிருவேன்” என்கிறார்.
பெரும்பாலும் தட்டுக் கடைகளைச் சென்னை முழுவதும் பெண்கள்தான் நடத்திவருகிறார்கள். சுயஉதவிக் குழுவிலும் தண்டலுக்கும் பணம் வாங்கிக் குடும்பத்தை நடத்தும் சுந்தரவல்லிகள் சென்னை முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.
*(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)*�,”