uசபரிமலை: கிரிமினல்கள்தான், போலீஸ் கிடையாது!

Published On:

| By Balaji

சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான் என்றும், காவல் துறையினர் கிடையாது என்றும் கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கேரளாவில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் சபரிமலை சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு தொடர்பாக, நவம்பர் 21ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், “சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது? இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு, கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நேற்று(நவம்பர் 23) கேரள உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான், காவல்துறையினர் கிடையாது. பிரச்சனையை ஏற்படுத்திய கிரிமினல்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். வசதி குறைவு காரணமாக தான் முகாம், சபரிமலையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டது. இதற்கும்,உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எந்த தொடர்புமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

**பெண்கள்**

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை காலங்களில் இரண்டு நாட்கள் பெண் பக்தர்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி நான்கு பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

**144 தடை நீட்டிப்பு**

சபரிமலை சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை, வருகிற 26ஆம் தேதி வரை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share