இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து இவர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ் மற்றும் இந்தியில் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா, தளபதி, இருவர் , உயிரே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், அடுத்து வெளியாக இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுதவிர இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ள இவர், திரைத்துறையில் பிரபலமாக வலம் வருபவர். சந்தோஷ் சிவனின் கால்ஷீட்டை பெறுவதும் மிகவும் கடினம்.
இந்நிலையில் சந்தோஷ் சிவனின் சமீபத்திய ட்வீட் பதிவு தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ட்வீட்டை மீம் வடிவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளதோடு நடிகைகளின் சம்பளத்தை சந்தோஷமாக கொடுக்கும் தயாரிப்பாளர்கள் , தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுகடுவென கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து ஆக்ரோஷமாக விமர்சித்து தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். இவரைப் போல் தயாரிப்பாளர் தேனப்பனும், “இது தவறான ஒரு கண்ணோட்டம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து தனது சர்ச்சை ட்வீட்டை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நீக்கியுள்ளார். தனது ட்வீட்டை நீக்கிய அவர், “நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டேன். நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.�,