இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை நாடுமுழுவதும் வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்து வருகிறது. இதனால், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
**வானிலை எச்சரிக்கை**
கடந்த 2 மாதத்தில் மட்டும் கேரளாவில் சுமார் 192.3 செ.மீ. அளவு மழை பொழிந்துள்ளது. இது, வழக்கமான மழை அளவை விட 49 சதவிகிதம் அதிகமாகும். இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவில் இடைவிடாது மழை பெய்யும் என்றும், 7 நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் தொடர்ந்து சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
**பாதிப்புகள்**
திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், இடுக்கி, கண்ணூர், பத்தனம்திட்டை, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாகப் பலத்த சேதமடைந்துள்ளது. மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் அபாய நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தம்பானூர் ரெயில் நிலையத்திற்குள் மழைத் தண்ணீர் புகுந்ததால் தண்டவாளங்கள் மூழ்கியுள்ளன. இதனால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
**இழப்புகள்**
இந்த பெருமழைக்கு, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கேரள மாநிலத்தில் பலியாகி உள்ளனர். பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்களும் பாதிப்படைந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தலா 4 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள், அதில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள முகாம்களில் மட்டும் 3,886 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
**அணைகள் நிலவரம்**
கேரள மாநிலத்தில் உள்ள 12 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அருவிக்கரை அணை, நெய்யாறு அணை, தேப்பாறை அணை உள்பட 12 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அதுவும் விரைவில் திறக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
**வெள்ள அபாய எச்சரிக்கை**
இடுக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் ஆலுவா பகுதிக்குத் தான் அதிகளவு செல்லும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோரக் காவல் படை படகுகள், விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
**சுற்றுலா பயணிகளுக்குத் தடை**
26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவிருப்பதால், அதிக அளவில் கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள்களில் இடுக்கி அணை நீர் மட்டமானது 2,400 அடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சூழலில் அபாயச் சங்கொலி எழுப்பப்பட்டு, அடுத்த 15வது நிமிடம் அணை திறக்கப்படும் என்று கேரள மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, இடுக்கி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணை திறக்கும்போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதியில்லை என்றும், பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை என்றும் அணை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”