குமரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமரிடம், “குமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இன்று (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமருக்கு முன்னதாக உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவிலான மீனவ கிராமங்களைக் கொண்டதாகும். இங்கே விவசாயப் பெருங்குடி மக்களும் அதிக அளவில் உள்ளனர். ரப்பர் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு முக்கடல் மட்டுமல்ல. மூன்று மதங்களும் சங்கமிக்கின்றன. சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அய்யா வைகுண்டசாமி திருக்கோயில் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. அனைத்து சமயத்தினரும் சகோதர பாசத்துடன் வாழும் மாவட்டம் கன்னியாகுமரி” என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர், உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கு பிரதமர் எடுத்து வரும் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக பாராட்டுதல்களையும், நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து, “தமிழ்நாடு அரசின் சார்பிலும், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பிலும் பிரதமருக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன்.இயற்கை பேரிடர்களினால் அதிக அளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். எனவே, மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களை இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாக மீட்பதற்கு ஏற்ப, ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்திட வேண்டும் என்று நான் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அக்கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து இம்மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் தேவையினை நிறைவேற்றித் தந்து, மீனவ மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும்” என்று பிரதமருக்கு வலியுறுத்தினார்.
மேலும், “கடந்த 5 ஆண்டு காலமாக பிரதமர் இந்திய நாட்டை வழி நடத்திச் செல்வது மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களுக்கே பாதுகாப்பாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த நாடே அவர் பின் நிற்கின்றது, தமிழ்நாடும் அவர் பின் நிற்கின்றது” என்று குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.�,