கீழடி அகழாய்வு முடிவுகள் பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சங்க காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை, வைகை ஆற்று நாகரிகம் ஆகியவை குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் சிவகங்கை அருகே கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பொருட்கள் 2218 ஆண்டுகள் பழமையானவை என்று அமெரிக்காவின் ப்ளோரிடா நகரிலுள்ள பீட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட கரிமப் பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி இந்த ஆய்வின் மூலம், 2400 ஆண்டுகளுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், அங்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அங்குத் தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். அவற்றில் இருந்து தான் அப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 2) ராமதாஸ், கீழடி அகழாய்வு முடிவுகள் பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கீழடி அகழாய்வை சீர்குலைக்க ஏராளமான சதிகள் நடைபெற்றது. தொல்லியல் துறை வல்லுனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முதல் இரு கட்ட அகழாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்ரீராமன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு தவறான இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என்று பதிவு செய்ய முயற்சிகள் நடந்தன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
”கீழடியில் இதுவரை மொத்தம் 4 கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதுவரை 2 பொருட்கள் மட்டும் தான் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது போதுமானதல்ல. குறைந்தது 200 பொருட்களாவது அமெரிக்காவிலுள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அவை எந்தக் காலத்தை சேர்ந்தவை என்பது கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது கீழடி தமிழர் நாகரிகத்தின் வயது இன்னும் அதிகம் என்பது உறுதி செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
”கீழடியில் தொல்லியல் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட இடம் 110 ஏக்கர் ஆகும். அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகப் பரப்பில் தான் இப்போது ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்யும் வகையில் அடுத்தடுத்தக் கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கீழடி ஆய்வில் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைத் தொகுத்து தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலில் சேர்க்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.�,