உடல் சூட்டைத் தணிக்கும் வடை!
கடலைப் பருப்புடன் வாழைப்பூவைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் வாழைப்பூ வடைக்குத் தனி மவுசு உண்டு. வீட்டில் செய்யப்படும் வடைகள் ஏன் அவ்வளவு ‘க்ரிஸ்ப்’ ஆக இருப்பதில்லை என்பதற்கு இன்னும் சரியான ஆராய்ச்சிபூர்வமான விடை இல்லையென்றாலும் அதை ஈடுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த வாழைப்பூ வடை. சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்கிற ரகத்தைச் சேர்ந்தது இந்த வடை.
**என்ன தேவை?**
வடைக்கு அரைக்க:
கடலைப் பருப்பு – ஒரு கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்
மாவில் கலக்க:
வாழைப்பூ – ஒரு கப்
பெரிய வெங்காயம் – கால் கப்
கறிவேப்பிலை, புதினா – தலா ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வடைக்குக் கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வாழைப்பூவை அதன் நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இனி அரைத்த வடை மாவுடன், இவற்றைச் சேர்த்து, பெருங்காயத்தூள் கலந்து பிசையவும். மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், வடைகளாகத் தட்டி, மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
**என்ன பலன்?**
இதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்குத் தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது. மலட்டுத்தன்மையைப் போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. உடல் சூட்டைக் குறைக்கும்; குடல் புண்ணை ஆற்றும்.�,