�
காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரைச் சந்திப்பது குறித்து ஒரு வாரத்திற்குப் பிறகுதான் முடிவு செய்யப்படும்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ள காரணத்தால், டெல்டா மாவட்ட பாசனத்துக்கு போதிய தண்ணீர் தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்டா மாவட்ட சம்பா பயிர்களை காக்கும் நோக்கில் கர்நாடக முதல்வரை சந்திப்பதற்கு தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடாக முதல்வர் சித்தராமையாவைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுத் தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 16ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் அதனால் 16ஆம் தேதிக்குப் பிறகுதான் சித்தராமையா தமிழக முதல்வரை சந்திக்ககூடும் என்று கர்நாடக முதல்வர் அலுவலக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
இன்று (ஜனவரி 31) பெங்களூருவில் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, “காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
மேலும், “கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருவதால், ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பழனிசாமியைச் சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.�,”