பூட்டான் டைரீஸ் 7 – நிவேதிதா லூயிஸ்
பாரோ நகரிலிருந்து திம்பு செல்லும் பாரோ-திம்பு நெடுஞ்சாலை பா-சூ ஆற்றை ஒட்டியே வளைந்து நெளிந்து செல்கிறது. பாரோவிலிருந்து சற்றுத் தொலைவில் அந்தச் சாலையிலிருந்து சரேலென ஒடிந்து கீழே ஆற்றின் கரையில் இறங்குகிறது சிறிய சாலை ஒன்று. அதில் கார் டயர்கள் கிறீச்சிட, கிட்டத்தட்ட நேர்க்கோட்டில் கீழிறங்கினால் வருகிறது டச்சோகாங் லக்காங் என்ற கோயிலுக்குச் செல்லும் இரும்புப் பாலம்.
15ஆம் நூற்றாண்டில் யோகி தங்க்தங் கியால்போ என்ற கவிஞர் கட்டிய இந்தக் கோயிலுக்கு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஆற்றைக் கடந்து செல்ல இரும்பாலான தொங்கு பாலத்தை வடிவமைத்துக் கட்டினார் தங்க்தங். எளிமையாக இரும்புக் கம்பிகளைக் கோர்த்து இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு புறமும் ஒற்றை அறைக் கோபுரங்கள், அவற்றை இணைக்கும் பாலம், அதன் மீது பல வண்ணப் பிரார்த்தனைக் கொடிகள், கீழே ஹோவென்று ஆர்ப்பரித்து ஓடும் பா-சூ ஆறு என்று ரம்மியமாய் இருக்கிறது அந்த இடம்.
பழைய பாலம் உறுதியாக இல்லை என்ற காரணத்தால், மரத்தாலான புதிய தொங்கு பாலம் அமைக்கப்பட்டு அதில் பயணிகள் நடக்க அனுமதிக்கப்படுகின்றனர். கீச் கீச் என்று ஓசையுடன் ஆடும் பாலத்தில் நடுங்கிக்கொண்டே நடந்து சென்று பிரார்த்தனைச் சக்கரங்களை சுற்றிவிட்டுத் திரும்பிவிட்டோம். திம்பு நகருக்குச் சென்று அங்குள்ள பெர்மிட் அலுவலகத்தில் மறுநாள் புனாகா என்னும் ஊருக்குச் செல்ல அனுமதி கோர வேண்டும் என்று திட்டம்.
முதல் பணியாக திம்பு நகரை அடைந்ததும் பெர்மிட் அலுவலகத்தில் விண்ணப்பம் தந்துவிட்டு, அங்குள்ள ராயல் டெக்ஸ்டைல் மியூசியத்தைச் சுற்றிப் பார்த்தோம். வித விதமாகப் பெண்கள் அணியும் கேராக்கள், ஆண்களின் கோ என்ற ஆடை, பின்னலாடைகள், கோயில்களில் தொங்க விடப்படும் ‘தங்கா’ கொடிகள், பூட்டானின் பூர்வ குடிகள் அணியும் குல்லாக்கள், யாக் மயிர் கோட்டுகள் என்று வரிசையாக இரண்டு அடுக்குக் கட்டிடம் முழுக்க உடைகளும், அதனுடன் அணியும் அணிகலன்களும் இருக்கின்றன. ஆஃப்கானிஸ்தானின் லாபிஸ் லசூலி நீலம் கொண்ட சிறிய வெள்ளி, தங்க வளையங்கள் ஆச்சரியத்தைத் தந்தன.
**பூட்டானில் பெண்களின் வாழ்நிலை**
இன்றும் பூட்டானில் 40 வயதைத் தாண்டிய பெரும்பாலான பெண்கள் ஆண்கள் போல முடியை மிகக் குட்டையாக வெட்டிக்கொள்கிறார்கள். காதில் வெள்ளி அல்லது தங்க வளையம், அதில் ஒற்றை லாபிஸ் லசூலி நீலக்கல். அதுதான் அவர்கள் அணிந்திருக்கும் அதிகபட்ச ஆபரணம். குட்டையாய் முடி வெட்டிக்கொள்வதன் காரணம் வயல்வெளிகள் முதல் அலுவலகங்கள் வரை பெரும்பாலும் பெண்கள் பணியாற்றுவதுதான்! கூந்தலைப் பராமரிக்க அவர்களுக்கு நேரமில்லை. தாய்வழிச் சமூகமாகவே பல தலைமுறைகளாக வாழ்ந்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் கல்வியில் சற்று தொய்ந்திருந்தாலும், இப்போது அரசின் இலவசக் கல்விக் கொள்கையால், நிறைய பெண்களுக்குக் கல்வியறிவு எளிதில் கிடைக்கிறது. கல்வியைப் பெரிதும் நம்பாமல், ஏதோ ஒரு கலையை, கைவேலையைக் கற்றுக்கொள்கின்றனர்.
தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 65% பெண்கள். ஆனால், உயர்நிலைக் கல்வி பெற்றவர்கள் வெறும் 35% மட்டுமே. திருமணங்களில் வரதட்சிணை இல்லை, பெரும் பொருள் செலவில் திருமணங்கள் செய்து வைப்பதும் இல்லை. ஆணும் பெண்ணும் பேசிப் பழகுகிறார்கள், பிடித்திருந்தால், ஆணைப் பெண் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறாள். தாய், தந்தைக்குச் சம்மதம் என்றால், வீட்டிலேயே விருந்து ஒன்றைக் கொடுத்து, அன்று முதல் மாப்பிள்ளை பெண் இருவருக்கும் எங்கு தங்குவது வசதியோ அங்கு தங்கிக்கொள்கிறார்கள். சிம்பிள்! பெரும்பாலும் பெண் வீட்டில் பெரியவர்களைக் கவனித்துக்கொள்ள ஆண் துணை இல்லாத பட்சத்தில் ஆண்கள் மனைவியின் வீட்டிலேயே ‘செட்டில்’ ஆகிவிடுகிறார்கள்!
**அமைதியைத் தர புத்தர் திருமேனி**
திம்பு நகரில் நாங்கள் அடுத்து சென்றது அங்குள்ள புத்த தோர்தென்மா என்ற பிரம்மாண்ட 177 அடி புத்தரைப் பார்க்க! திம்புவின் குன்செல் பொத்ராங் பகுதியில், பிரம்மாண்டமான தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் செப்புத் திருமேனி தெரிந்தாலும், இந்தத் திருமேனியின் அடித்தளத்தில் இவரையும் சேர்த்து 125000 புத்தர் செப்புத் திருமேனிகள் இருக்கின்றன. கையில் பாத்திரத்துடன் இருக்கிறார் இந்த 177 அடி உயர சாக்கியமுனி. சப்துருங் ஞவாங் ஞாம்கியேல் பூட்டானை ஒன்றுபடுத்தி நாடாக்கியவர். அவர் மறைந்த அதே இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோயில்.
உலகிற்கு அமைதியும் மகிழ்வும், கிடைக்க இது போன்ற நெடிதுயர்ந்த புத்தர் திருமேனி நிறுவப்படும் என்று குரு பத்மசம்பவர் எட்டாம் நூற்றாண்டிலேயே தெர்மா (மறை உண்மை) எழுதி வைத்திருப்பதாக பூட்டான் மக்கள் நம்புகின்றனர். உலகின் மிக உயரமான புத்தர் திருமேனிகளுள் ஒன்றான இது, 2015ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மன்னர் குடும்பத்தவர்களுக்கு மிகவும் இணக்கமான புத்தர் சிலை இது என்றும், திம்பு நகரைக் காப்பது போல உயர்ந்த சிகரத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
**பூட்டானைப் புரிந்துகொள்ள…**
அங்கிருந்து “சிம்ப்ளி பூட்டான்” என்ற உயிர்க் காட்சியகத்துக்குச் சென்றோம். பூட்டான் மக்களது வாழ்க்கை முறை, உடைகள், உண்ணும் வழக்கம், வீடுகள், அவற்றின் அமைப்பு ஆகியவற்றைக் கண்முன் கொண்டுவருகிறது இந்த மியூசியம். 300 ரூபாய் டிக்கெட், அதில் அவர்கள் நாட்டு ஆடையான கேராவை அணிந்துகொண்டு சுற்றிப்பார்க்க 100 ரூபாய் வாடகை. அந்த ஆடை மீது ஒரு கண் என்பதால், அதையும் அணிந்துகொண்டு உள்ளே நுழைந்தோம்.
முதலில் ‘ஆரா’ என்ற வரவேற்பு பானம் வழங்கப்படுகிறது. அரிசியிலிருந்து செய்யப்படும் இந்த பானம் லேசான போதை தருவதாக அசத்துகிறது. பெரும்பாலும் வீடுகளில் உள்ள பெண்களே ஆராவை அரிசி ஊறவைத்து ஃப்ரெஷ்ஷாகச் செய்துவிடுகிறார்கள்.
அடுத்து ‘மாடல் வீடு’ ஒன்றை வேடிக்கை பார்த்தோம். அவர்களது வரவேற்பறை, பூசை அறை, சமையல் அறை போன்றவற்றில் கண் கொள்ளாத சாதனங்கள். அத்தனையும் இயற்கையாக விளைந்தவை, அல்லது மரம், மூங்கிலால் செய்யப்பட்டவை!
மரத்தாலான நூடுல் மேக்கர் ஒன்றும் இருந்தது. அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து நூடுல் மேக்கரில் இட்டுப் பிழிந்துவிடும் வழக்கம் பண்டைய பூட்டானில் இருந்திருக்கிறது! அடுத்து வரவேற்பு நடனம் ஒன்றை நான்கு பெண்கள் நிகழ்த்தினார்கள். வீடுகள் கட்டும்போது அவர்கள் பாடும் பாடல் ஒன்றையும் ‘திமிசுக்கட்டை’ கையில் பிடித்துக்கொண்டு மண்ணை சமப்படுத்திப் பாடினார்கள்.
மற்றொரு ஓரத்தில் வெயில் காலங்களில் டர்னிப் இலைகள், மிளகாய், காளான், ஆப்பிள் தோல், யாக் சீஸ், பூசணிக்காய், சோளம் போன்றவற்றைக் காயவைப்பது எப்படி என்றும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பெரும்பாலும் நீண்ட குளிர்காலம் இருப்பதால் வெயில் காலங்களில் கிடைக்கும் காய்கறிகளைக் காயவைத்துத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
**அற்புத மனிதன்**
இந்த மியூசியத்தின் ஹைலைட் பெமா என்ற அற்புத மனிதன். இரு கைகளும் செயலிழந்த நிலையில் உள்ள பெமா, ரம்பம் கொண்டு மரத்தை அறுத்து அதில் வண்ணம் தீட்டி கலைப் பொருள்கள் செய்வதில் கில்லாடி! அதிலும் செய்த மரச்சிற்பத்தின் பின்புறம் தன் கால் விரல்கள் கொண்டு “பெமா” என்று கையெழுத்திட்டு, அத்தனை புன்னகையுடன் நம்மிடம் தருகிறார்!
வாய் கொள்ளாத புன்னகையுடன் அவரைப் பார்த்துவிட்டு வெளியேறினால், கையில் வில் அம்பு தந்து போர்டு ஒன்றைக் காட்டி, “அம்பு விடுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். விளையாட்டுதான் என்றாலும், நாம் விட்ட அம்புகள் மூன்றும் தரையைக் குத்திப் பதம் பார்த்தன. நல்ல வேளை மியூசியத்தில் கரடிகள் இல்லை. இருந்திருந்தால் நம் முகத்தில் துப்பியிருக்கும்!
பூட்டானின் தேசிய விளையாட்டு இந்த ஆர்ச்செரி! திறந்த வெளி மைதானங்களில் கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் மர அம்புகளைச் சர் சர்ரென்று சரியாக எய்து விளையாடுகிறார்கள். இதற்கென ஊர்களில் தனி கிளப்புகளும் உண்டு.
“மன்னர் வழிபடும் லக்காங்கைப் பார்க்க வேண்டாமா?”, என்று டிரைவர் வினவ, அங்கிருந்து கிளம்பினோம்..மாலை மங்கிக்கொண்டிருந்தது…
(தொடரின் அடுத்த பகுதி வரும் செவ்வாயன்று)
[பகுதி 1](https://minnambalam.com/k/2019/04/30/10)
[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/13/72)
[பகுதி 5](https://minnambalam.com/k/2019/05/17/18)
[பகுதி 6](https://minnambalam.com/k/2019/05/21/28)
(கட்டுரையாளர் நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக்கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது அவள் விகடன் இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதி வருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.)
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”