uஐ.பி.எல். 2017 : யாருக்கு ராசியானது ஈடன் கார்டன்?

Published On:

| By Balaji

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் அணியும், முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடவுள்ளனர். கொல்கத்தா அணியின் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ்லின் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை. இது, கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு என்றாலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இணைந்திருப்பது கொல்கத்தாவுக்கு சாதகமானதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியில் கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி, கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அணியை வெற்றிபெறச் செய்தார். மேலும் பந்துவீச்சிலும் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதால் இன்றைய போட்டி சுவாரஸ்யமானதாக அமையும். இதற்குமுன்பு கொல்கத்தா அணிக்காக விளையாடி இப்போது பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றும் விருத்திமான் சஹா நேற்று நிருபர்களிடம் கூறுகையில் **மாநில போட்டிகள், ரஞ்சி, ஐ.பி.எல். என்று ஈடன்கார்டனில் இளம் வயதில் இருந்தே நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்குள்ள சூழல் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று** என தெரிவித்தார். அவர் சிறப்பாக விளையாடுவார் என்பதால் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலம் என்றே கூறலாம். இதுவரை, இந்த இரண்டு அணிகளும் 19 முறை விளையாடியுள்ளனர், அதில் கொல்கத்தா அணி 13 முறை வெற்றிகண்டுள்ளது. அதில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் கொல்கத்தா அணியே வெற்றிகண்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share