uஎன்னுடைய அடையாளங்களை நான் ஏன் விட வேண்டும்?

Published On:

| By Balaji

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

சந்திப்பு: இனியன்

சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுப்பீர்களா, பாபா ஸ்கிரிப்டுக்கும், கார்ல் மார்ஸ் உரைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் நிகழும் மனித உரிமை மீறலில் மௌனம் ஏன், உங்கள் எழுத்தில் பல அயல்மொழிக் கதைகள் ஏன் என்பன போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன்.

**யாருக்காக எழுதுகிறீர்கள்?**

யாருக்கு என்று தெரியாது. யாரோ ஒருத்தருக்கு என்று வைத்துக்கொள்ளலாம். அவர் படிக்கும்போது என்னென்ன இடர்கள் வரும், எந்தெந்த இடங்கள் புரியாமல் போகும் என்று யோசிப்பேன். ஏனென்றால் அவற்றைக் கடந்துதான் நான் இங்கே வந்திருக்கிறேன் இல்லையா?

**சில எழுத்துகள் புரியாமல்போவது ஏன்?**

பொதுவாக என்ன எழுதுகிறோம் என்பதை வைத்துத்தான் அது கடினமாக இருக்கிறதா, எளிதாக இருக்கிறதா என்று சொல்ல முடியும். நீங்கள் கணிதம் படிக்கும்போது ஆரம்ப நிலையில் வெறும் எண்களை வைத்துத்தான் கணிதம் சொல்லித் தருவார்கள். எண்களை எடுத்துவிட்டு (a+b) என்று வரும்போது சிக்கலாகிவிடும். கணிதமோ, அறிவியலோ எந்தத் துறையிலும் மேல்நோக்கிப் போகப் போகக் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இலக்கியத்தினுடைய ஆரம்ப நிலைப் படைப்புகள் கொஞ்சம் எளிமையாக இருக்கும். போகப் போக கடினமாக இருக்கும்.

ரொம்ப உச்சியில் இருப்பது என்பது ரொம்ப எளிமையாக இருக்கும். அதுதான் அதன் சிறப்பு. நோபல் பரிசு வாங்கிய Feynman Lectures படித்துப் பார்த்தீர்களானால் ரொம்ப எளிமையாக இருக்கும். ஆனால், அந்த எளிமையை அடைவது ரொம்ப ரொம்பக் கஷ்டம். ஒருவர் 30 வருடங்கள், 40 வருடங்கள் தொடர்ந்து எழுதுவதன் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக தன் அலங்காரங்களை, தேவையற்ற விஷயங்களை நீக்கத் தொடங்குவார். முடிந்தவரை எதையும் நேரடியாகவே சொல்லத் தோன்றும். 20, 25 வயதில் ஒருத்தருக்கு நல்ல உடை அணிந்து கொள்வதில், பரபரப்பாக இருப்பது பிடித்திருக்கிறது. முதுமையை நோக்கிப் போகப் போக ஒரே ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டால் போதும் என்று ஆகிவிடுகிறது அல்லவா? வேறு சட்டை போடத் தெரியாமலா இதைப் போடுகிறார்? இந்த உடையிலேயே தான் எப்படி இருக்கிறேன் என்று காட்டிவிடலாம் என்றிருக்கும்.

படைப்பு போகப் போகப் போக எளிமை அடையும். எளிமைதான் இலக்கியத்தில் ரொம்பக் கஷ்டமானது. தோற்ற அளவில் பார்த்தால் பார்க்க எளிமையாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் அடைவது ரொம்பச் சிக்கல்.

**இலக்கியம் ‘பிறக்கிறதா’?**

இலக்கியம் உருவாக்கப்படுகிறது. அதனுடைய சூழலால் உருவாக்கப்படும். தனிநபர்களுடைய நிகழ்ச்சிகளால், அனுபவத்தால் வாழ்க்கையால் உருவாக்கப்படும். பல நேரங்களில் நினைவுகளால் உருவாக்கப்படுகிறது. இலக்கியம் உருவாக்கப்படும்போது மொழி வழியாகத்தான் வெளிப்படுத்துகிறது. மொழி ஏற்கெனவே புழக்கத்தில் இருந்ததால், மொழி நம் அனுபவத்தைத் துல்லியமாக சில நேரங்களில் வெளிப்படுத்தும். சில நேரங்களில் வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கும். அந்த வேளையில் ஒரு புனைவின் வழியாக வெளிப்படுத்தலாம் என்று தோன்றும். அப்படிதான் இலக்கியம் உருவாகிறது.

**எழுத்து எவ்வளவு தூரம் திறமை சார்ந்தது (Skill), எவ்வளவு தூரம் கலை (Art) சார்ந்தது?**

இரண்டும்தானே. சமைப்பதில் சமைக்கிற ஆளினுடைய வேலையும் முக்கியம். ருசிகரமானதாகவும் வர வேண்டும். ஒரு மணி நேரம், முக்கால் மணி நேரம் நின்று சமைப்பது ஒரு வேலைதான். அடுப்பு முன்பு நிற்க வேண்டும்; அடுப்பு மூட்ட வேண்டும்; சரியான பாத்திரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதையெல்லாம் செய்தால் ருசி வந்துவிடாது. அகப்பார்வை என்று ஒன்று உள்ளது. அதே போல எழுத்தாளனுக்கு, அந்த நபருக்கென்று இருக்கும் ஞானம், மொழிநடை, பயிற்சி வெளிப்படுத்தும் திறன் இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும். ஓர் எழுத்தாளனுக்கு அகப்பார்வையின் தூண்டுதல் முக்கியம். அதற்கு அவன் எவ்வளவு தூரம் முயற்சி எடுத்துக்கொள்கிறான் என்பதும் அவசியமாகிறது.

ஒருவர் சிற்பம் செய்பவராக இருந்தால், சிற்பம் செய்வதுதான் அவர் வேலை. ஆனால் அதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறார். ஒரு கல்லில் இருக்கக்கூடிய சின்னத் துகள்களையும் நீக்குகிறார், மெனக்கெடுகிறார். சிற்பம் செய்யத் தெரிந்தால் மட்டுமே போதாது. கலை நுட்பங்களை நுணுக்கங்களைச் செய்யவும் தெரிய வேண்டும்.

**உங்கள் நாவல்களில் மையக் கதையைவிட கிளைக் கதைகளுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருப்பது ஏன்?**

மையக் கதை, கிளைக் கதை என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். நான் வாழக்கூடிய வீதியில் நான் மட்டும் வசிக்கவில்லையே! எனக்கு நான் முக்கியம். உலகத்துக்கு நான் மட்டும் முக்கியமில்லையே? நான் சிலரோடு இணைந்திருக்கிறேன். சிலரோடு இணைந்து வாழ்கிறேன். என்னோட வேலையும் முக்கியம், அவர்களின் வேலையும் முக்கியம். அதனால் அது போன்றவற்றைக் கிளைக் கதைகள் என்று பார்க்க மாட்டேன். ஒரு நாவலைப் பல்வேறு முடிச்சுகளால் பல்வேறு நிற இழைகளால் செய்கிறோம். அதில் அவர்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

**எஸ்.ரா. பேசினால் இப்படித்தான் இருக்கும். எஸ்.ரா. எழுத்து இப்படித்தான் இருக்கும் என்று உங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கியுள்ளீர்கள். அது தொடக்க நிலையில் உள்ள இலக்கிய ஆர்வலர் பலருக்கும் ஈர்ப்பை உருவாக்குகிறது. ஆனால், இது ஒருவகையில் உங்களை, நீங்கள் பேசுவதை ஊகிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. உங்களின் இந்தப் பாணி உங்களையே சிறைப்படுத்துவதாக உணர்த்துள்ளீர்களா? இதை மாற்றுவது பற்றிச் சிந்தித்திருக்கிறீர்களா?**

என்னுடைய அடையாளம் அதுதானே? நான் ஏன் என்னுடைய அடையாளங்களை விட வேண்டும்? இந்த அடையாளங்களை உருவாக்கத்தானே இவ்வளவு காலம் செலவு பண்ணியிருக்கேன். அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று சொன்னால் கவனமாக இருப்பேன். முடிந்தவரை என்னுடைய எழுத்துகளை வைத்து நான் என்ன எழுதுகிறேன் என்று கண்டுபிடிக்க முடியாதபடி செய்வேன். ‘யாமம்’ எழுதினால் அடுத்து உடனே ‘யாமம்’ மாதிரி எழுத மாட்டேன். ‘நிமித்தம்’ எழுதுவேன். ‘நிமித்தம்’ எழுதினால் பிறகு, சம்பந்தமே இல்லாமல் ‘இடக்கை’ எழுதுவேன். அடுத்து ‘பதின்’ எழுதுவேன். ஒன்றைப் பார்ப்பவரால் அடுத்ததைக் கண்டுபிடிக்க முடியாது. வாசித்தால் என்னுடைய எழுத்துகளின் பின்னுள்ள ஓர்மையைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், எழுத்தை மட்டுமே வைத்து நான் என்ன எழுதுவேன், எந்தத் திசையில் பயணிப்பேன் என்று கண்டுபிடிக்க முடியாது.

**ஒரு மார்க்சிய கலை விமர்சகர் ‘பாபா’ ஸ்கிரிப்டாக இருந்தாலும் ‘கார்ல் மார்க்ஸ்’ பற்றிய உரையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தந்துவிடுவீர்கள் என்று கேலியாக விமர்சித்துள்ளார்…**

சரிதானே. அவர் என்னைப் பாராட்டத்தானே செய்திருக்கிறார். நான்தான் அகிரா குரசாவாவும் பார்த்தேன். நான்தான் எம்ஜிஆர் படமும் பார்த்தேன். எந்த வயதில் பார்த்தேன், எந்த வயதில் செய்தேன் என்பதில்தானே வித்தியாசம் உள்ளது. இப்போதுகூட வாரம் ஒருமுறை குடும்பத்துடன் திரையரங்குக்குப் போய்த் திரைப்படம் பார்ப்பேன். யாரோ ஒருவர் என்னிடம் வந்து என்ன சார் நேற்று ‘அகிரா குரசாவா’ படம் பார்த்துவிட்டு இன்று ‘2.0’ பார்க்கிறீர்களே என்று கேட்டால், நான் ‘2.0’ படத்தை எப்படிப் பார்ப்பேன், அகிரா குரசாவாவை எப்படிப் பார்ப்பேன் என்று சொல்வேன். கார்ல் மார்க்ஸ் பற்றியதாக இருந்தாலும் பாபா பற்றியதாக இருந்தாலும் அர்ப்பணிப்போடு தான் செய்வேன். இரண்டுக்கும் வேறுபாடு எனக்குத் தெரியும்.

ஓர் எழுத்தாளர் வங்கியில் வேலை பார்க்கிறார் என்றால் அவரைப் பார்த்து என்ன சார் கணக்கு எழுதிக்கிட்டிருக்கீங்க என்றா கேட்பீர்கள்? கணக்கு எழுதுவதையும் துல்லியமாகத்தானே எழுதியாக வேண்டும். அது அவர் பணி இல்லையா? என்ன சார் கதை எழுதிட்டு திடீரென்று லோன் வசூலுக்குப் போகிறீர்கள் என்றால் அது அவர் வேலை. பணியையும் விருப்பத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஓர் எழுத்தாளனாக எனக்கு எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியும். இந்த மாதிரியான விமர்சனங்களை நான் பாராட்டாகத்தான் எடுத்துக் கொள்வேன்.

**உங்கள் எழுத்தில் உலக இலக்கியத்தின் தாக்கம் இருக்கிறதே?**

**சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுப்பீர்களா?**

**இடது சாரி அரசியலை ஏன் விமர்சிப்பதில்லை?**

*(என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மதியம் 1 மணிப் பதிப்பில்)*�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share