இந்தியன் ஆயில் கார்பரேசன் (ஐ.ஓ.சி.) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.37,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து *எஸ்.எம்.இ. டைம்ஸ்* ஊடகத்திடம் ஐ.ஓ.சி.யின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குநர் ஆர்.சீதாராமன் ஆகஸ்ட் 22ஆம் தேதி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.7,112 கோடியை அடுத்த 3 ஆண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தொகையானது பைப்-லைன் விரிவாக்கம், துறைமுக வசதிகளை அதிகரித்தல், பெட்ரோல் மற்றும் டீசலைக் கையாளுதலுக்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கு முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேசன் குழுமத்தின் அங்கமான சென்னை பெட்ரோலியம் தனது சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க ரூ.30,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இங்கு ஆண்டுக்கு 9 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதை 10 மில்லியன் டன்னாக அதிகரிக்க இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி சேலம் மற்றும் கோவையில் எரிவாயு விநியோக அமைப்பை ஏற்படுத்தவும் முதலீடு செய்யப்படவுள்ளது. அதற்கான ஏலத்தை ஐ.ஓ.சி அண்மையில் கைப்பற்றியது. எண்ணூர் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) நிலையத்திலிருந்து நிறுவனங்களுக்கு பைப்-லைன் வழியாக எரிவாயுவை எடுத்துச் செல்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன” என்றார்.
எண்ணூரில் ஐ.ஓ.சி. நிறுவனம் கூட்டு முயற்சியுடன் ரூ.5,151 கோடி முதலீட்டில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலையில் ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் டிசம்பரில் இந்த ஆலை இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,