�
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இறந்து கிடக்கும் மீன்களால், அப்பகுதியில் துர்நாற்றம் பரவி வருகிறது. இதுகுறித்து, தமிழக மீன்வளத் துறை உதவி இயக்குனர் இன்று (செப்டம்பர் 3) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால், சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.
நேற்று திருவள்ளூர் அருகேயுள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்குச் சுற்றுலா சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு, நீரில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் பரவியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று பூண்டி நீர்த்தேக்கத்துக்குக் குடும்பத்துடன் வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பினர். இறந்த மீன்களால், அங்குள்ள நீர் மாசுறுவதாகப் புகார் கூறினர் அப்பகுதி மக்கள்.
மீன்கள் இறந்து கிடந்தது குறித்து, இன்று காலை தமிழக மீன்வளத் துறை உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
�,