இந்திய ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் 10 முதல் 15 விழுக்காடு ஊதிய உயர்வு இருக்குமென்று டீம் லீஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
டீம் லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’இந்த ஆண்டில் இந்திய ஊழியர்களின் ஊதிய உயர்வு 10 முதல் 15 விழுக்காடாக இருக்கும். ஆய்வு நடத்தப்பட்ட 17 துறைகளில் 9 துறைகள் இரட்டிப்பு இலக்கத்தில் ஊதிய உயர்வைக் காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற துறைகளிலும் ஊதிய உயர்வுக்குச் சாதகமான சூழலே உள்ளது. முக்கியமான 9 நகரங்களில் 7 நகரங்கள் சிறப்பான ஊதிய உயர்வைக் கொண்டிருக்கும் என்பது தெரிகிறது.
பொதுவாக, அனைத்துத் துறைகளையும் ஒப்பிடும்போது ஊதிய உயர்வு தோராயமாக 11.5 விழுக்காடாகவும், அதிகபட்ச ஊதிய உயர்வு 18.2 விழுக்காடாகவும் இருக்கும். அதிகபட்ச உயர்வைப் பெங்களூரு நகரில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கொண்டிருக்கும். எம்பெடட் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் ஆற்றல் துறை ஊழியர்களுக்கு 17.3 விழுக்காடு ஊதிய உயர்வு இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. டீம் லீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிதுபர்னா சக்ரபோர்த்தி *மணி கண்ட்ரோல்* ஊடகத்திடம் பேசுகையில், எல்லாத் துறையிலும் உள்ள ஊழியர்களுக்குத் தோராயமாக 11.5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்.
முன்னதாக வெளியான ஜாப்ஸ் & சேலரீஸ் பிரீமியர் ஆய்வில், பெங்களூருவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களில் 15.37 விழுக்காடும், மும்பையில் உள்ள கல்வி நிறுவனங்களில் 14.55 விழுக்காடும் இந்த ஆண்டில் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.�,