�
இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
பீட்சா, ஜிகர்தண்டா, நேரம், கருப்பன், பேட்டை, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் மீது பாபி சிம்ஹா காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். பரங்கிமலை காவல்துறை துணை ஆணையர் முத்துசாமியிடம் பாபி சிம்ஹா அளித்துள்ள புகார் மனுவில், “கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி தயாரிக்கும் அக்னிதேவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். படப்பிடிப்பில் ஐந்து நாட்கள் கலந்துகொண்டேன். அவர் என்னிடம் கூறிய கதைப்படி படத்தை எடுக்காமல், வேறு கதையை வைத்து படத்தை உருவாக்கியதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை. ஏற்கெனவே நான் நடித்த காட்சிகளை காண்பிக்கும்படி கேட்டதற்கு அவர் மறுத்ததால் பிரச்சினை ஏற்பட்டு படத்திலிருந்து விலகினேன்.
இதுதொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி Vs தேவி’ என மாற்றி வரும் 22ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நான் நடித்துள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இப்புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க நந்தம்பாக்கம் காவல்துறையினருக்கு துணை ஆணையர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜான் பால்ராஜ் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.�,