இந்தியாவை விட இங்கிலாந்து அணி சிறந்த ஆல்ரவுண்டர்களைக் கொண்டுள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மிகமுக்கிய போட்டியான சவுத்தாம்டன் டெஸ்டில், இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. இதே போல் பிர்மிங்கமில் நடந்த முதல் டெஸ்டிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி கைமாறியிருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் மோசமாக ஆடுவது இரு அணிகளுக்கும் பொதுவான பிரச்சினை என்றாலும், மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி, இந்தியாவை விட ஒரு படி மேலே உள்ளதுதான் இந்த வெற்றிக்குக் காரணமாக கருதப்படுகிறது.
எட்ஜ்பாஸ்டன் போட்டியில் 8ஆவது வீரராகக் களமிறங்கி அரைசதம் அடித்திருந்த சாம் கரன், இந்தப் போட்டியிலும் அவரது பணியை சிறப்பாகச் செய்தார். ஆல்-ரவுண்டர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்களும் எடுத்தார். பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் முக்கியக் கட்டத்தில் கோலியின் விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வினின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.
போட்டி முடிந்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, கடுமையான சூழ்நிலைகளில் எங்களை விட இங்கிலாந்து பின்கள வீரர்கள் மிகத் துணிச்சலாக செயல்படுகிறார்கள். அணி நினைப்பதை அவர்கள் செய்து முடித்துவிடுகிறார்கள். இது அவர்களது தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இதே போலான ஆட்டத்தைத்தான் இங்கிலாந்து பிர்மிங்கமிலும் வெளிப்படுத்தியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் சிறப்பாக பேட் செய்து 50.2 சராசரியைக் கொண்டுள்ள சாம் கரனை பாராட்டிய கோலி, “சாம் கரனுக்கு எனது வாழ்த்துக்கள். இங்கிலாந்து அணியின் சிறந்த தேடல் அவர். மொயீன் அலி சிறப்பாக பந்துவீசினார். அவர் பந்துவீசிய நீளம், வேகம் அனைத்துமே அருமை. அவர் விக்கெட் எடுக்கத் தகுதியானவர்தான்” என்று கூறியிருந்தார்.
�,”