ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்-சுவாதியைக் கொன்ற சாதித் திமிருக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று ட்விட் செய்துள்ளார் திரைப்பட இயக்குனரான பா.இரஞ்சித். இவர் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக, ஓசூரில் இன்று (நவம்பர் 17) இந்த படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளியைச் சேர்ந்தவர்கள் நந்தீஷ்- சுவாதி. நந்தீஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன், இருவரும் காணாமல்போயினர். நேற்று, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் காவிரி ஆற்றில் பிணமாக இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நந்தீஷ்- சுவாதி இருவரையும் ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், சுவாதியின் தந்தை சீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கர்நாடக மாநில போலீசார்.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சாதிக்கு முடிவு கட்டுவோம் என பகிர்ந்துள்ளார், இயக்குநர் பா.ரஞ்சித்.
இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை…வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று எனப் போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஷ்=சுவாதி இவர்களைக் கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பா.ரஞ்சித்.
அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளைப் பதிவிட்டார். “தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்…துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்..இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம்!
திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!!விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடும் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆணவப்படுகொலையை கண்டித்து, நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“சாதிய அநீதிக்கு எதிராக அனைத்துத் தோழமைகளும், முற்போக்குவாதிகளும் அணிதிரள்வோம். சாதிய ஆணவத்தை அழித்தொழிப்போம்” என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் நீலம் பண்பாட்டு மைய தோழர்கள்.
ஓசூர் ராம்நகர் பகுதியில் சென்ற நீலம் அமைப்பினர், சமத்துவத்திற்கான கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் அவர்களைக் கலைந்து செல்லுமாறும், 144 தடை உத்தரவு போடப்போவதாகவும் தெரிவித்ததாகக் கூறினர் நீலம் அமைப்பினர்.
ஆணவப்படுகொலை செய்த சாதிவெறியர்களைக் கைது செய் என்றும், தலித் படுகொலை நடக்கும்போது அரசும் அரசியல் கட்சி தலைவர்களும் மெளனம் காப்பது ஏன் எனவும் முழக்கங்களை எழுப்பியவாறு, துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நீலம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்றனர்.
**-ர.ரஞ்சிதா**�,”