சத்குரு ஜகி வாசுதேவ்
உறவு நிலைகளில் உண்டாகும் சிக்கல்கள் தற்போது அதிகரித்துவரும் சூழலில், சிலர் உறவுகளை நிர்வகிக்க நினைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், அது ஒருபோதும் வேலை செய்வதில்லை! அற்புத உறவுகள் அமைய வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடு என்ன என்பதை இப்பதிவு உணர்த்துகிறது!
**சத்குரு:**
மனித உறவுகள் வேடிக்கைக்குரிய விஷயமாகவே இருக்கின்றன. மனிதர்களுக்கு அவர்கள் உறவுமுறை அனைத்துமே மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. பெரும்பாலான மக்களால் உறவு என்பது இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அதேநேரத்தில், பெரும்பாலான உறவு நிலைகள், ஆனந்தத்தைவிடத் துன்பத்தையும், விடுதலையைவிடச் சிக்கலையும், அன்பைவிட எரிச்சலையுமே அதிகமாக ஏற்படுத்துகின்றன. ஒரு சில கணங்கள் ஒன்றுபட்டு இருப்பதற்காக, மக்கள், தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையே தியாகம் செய்ய முழு விருப்பத்துடன் இருக்கின்றனர். அந்தச் சில கணங்கள் அவர்களுக்கு அவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கின்றன.
பல்வேறு உறவு முறைகள் இருக்கின்றன. நாம் எல்லோருமே கொண்டிருக்கும் முதலாவது உறவு தாயிடமிருந்து துவங்குகிறது. கருப்பையின் சுகம், தாய்ப்பாலின் ஊட்டச்சத்து, அன்போடும், அக்கறையோடும் கவனித்துக்கொள்வது எல்லாமே அதனோடு வருகின்றன. அடுத்த உறவுமுறை, ஆதரவு, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டியாக இருக்கும் தந்தையாக இருக்கலாம். பின்னர், கற்றுக்கொள்வது, பகிர்ந்துகொள்வதற்கான உறவுகளாக ஆசிரியர்கள், நண்பர்கள் வருகிறார்கள். பின்னர் கணவன் மனைவியர், காதலர்கள், குழந்தைகள், சமூக கட்டமைப்பைச் சார்ந்த மற்ற உறவுமுறைகள் ஆகியவை வருகின்றன.
ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஒன்றைக் கொடுக்கவும், ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உணர்வுரீதியான தேவை இருப்பதாலும், இந்த உறவுகளின் மூலம் அவை ஓரளவிற்கு நிறைவேற்றப்படுவதாலுமே ஒருவரால் தொடர்ந்து அந்த உறவுகளில் இருக்க முடிகிறது. தங்களது உறவு நிலைகளைக் காரண அறிவு ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் மக்களால் எந்த உறவிலும் ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. “இந்த உறவுமுறை உண்மையாகவே தேவையானதுதானா?” என்று நீங்கள் காரண அறிவோடு ஒவ்வொரு உறவுமுறையையும் பரிசோதனைக்கு உட்படுத்தினால், எந்த ஒரு உறவு நிலையும், உங்கள் பரிசோதனையில் தேறாது. உறவுகளால், உங்களுக்குள் எங்கோ ஒருவிதமான நிறைவு ஏற்படுகிறது. உறவுமுறைகள் மூலம் உங்களுக்கு ஆனந்தம், பகிர்தல், ஒருமை, ஆதரவு, பாதுகாப்பு ஆகியவை பல கணங்களில் ஏற்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும்விட தனிமையின் அச்சுறுத்தலைப் போக்குவதற்காகவாவது உறவுமுறை தேவைப்படுகிறது.
**உறவு நிலைகளை உருவாக்குவது எது?**
எப்போதும் அன்பு மட்டுமே உறவு நிலைகளை உருவாக்குவதில்லை. திருமண உறவில் மட்டுமல்லாமல், மற்ற உறவுநிலைகளில்கூட மக்கள் இணைந்திருப்பதற்கு, மிகப்பெரிய காரணம் தனிமை தரும் பயம்தான். ஆயினும், இதைத்தவிர, உணர்வு ரீதியான நிறைவு இருப்பதாலும் கூட மக்கள் உறவுகளைத் தொடர்கின்றனர். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட உறவுநிலையில் மட்டுமல்ல, மற்ற எல்லாவிதமான உறவுநிலைகளிலும் இதுதான் நிகழ்கிறது.
ஒருநாள், ஒரு கணவனும், மனைவியும் கார் ஓட்டியபடியே ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தீவிரமான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வீட்டில் விவாதம் வந்தால் விவாதம் சூடுபிடிப்பதற்கு முன் ஏதோ ஒரு காரணம் கூறி எழுந்து போய்விடலாம். ஆனால் கார் ஓட்டும்போது, விவாதம் ஏற்பட்டால், அந்த இடத்திலிருந்து செல்ல முடியாது. விவாதத்தில் ஒரு கட்டத்திற்குப் பின்னர் கணவனும், மனைவியும் ஏதும் பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தனர்.
பயணத்தின் போக்கில் ஒரு பண்ணையை அவர்கள் கடக்க நேர்ந்தபோது, அங்கிருந்த கழுதைகள், பன்றிகள், ஆடுகளின் மந்தையை அந்த மனைவி சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட கணவன், “உன்னுடைய உறவுக்காரர்களாக இருக்க வேண்டும், அல்லவா?” என்றான்.
மனைவி சொன்னாள், “ஆமாம், என் புகுந்த வீட்டு உறவுகள்.”
இதுபோன்ற உரையாடல்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் உறவுகளிடையே நிகழ்வது கிடையாது. ஒருவரையொருவர் நேசிக்கும் மக்களிடையேதான் இப்படிப்பட்ட விஷயங்கள் நிகழ்கின்றன. இதுதான் காதல் உறவு என்பது. அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்திருந்தால், உறவை முறித்துவிடும்படியாக, உண்மையிலேயே தர்மசங்கடமான ஏதோ ஒன்றைச் செய்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதுதான் இங்கே பிரச்சினை. ஆனால் அது இப்படித்தான் வெளிப்பாடு காண்கிறது. ஏனென்றால் தங்களது அற்பத்தனத்தை ஒருவருக்கொருவர் ஒரு வரம்புக்குள் உட்பட்டுத்தான் அவர்களால் வெளிப்படுத்த முடியும்.
ஒரு பெண்மணி கடைவீதிக்குச் சென்று, தனக்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு, பணம் கொடுப்பதற்காகத் தனது கைப்பையைத் திறந்தார். எப்போதும் போலவே, அவருக்கு அவசியமானவையெல்லாம் கைப்பையின் ஏதோ ஒரு மூலைக்குச் சென்றிருந்தன. ஆகவே, அவர் அதிலுள்ள எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைத்தவாறு தனக்கு வேண்டியதைத் தேடிக்கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட் கருவியும் வெளியில் வர நேர்ந்தது.
இதைப் பார்த்த விற்பனையாளர், “தொலைக்காட்சியின் ரிமோட்டை எப்போதும் உங்களுடன் வைத்திருப்பீர்களா?” என்று கேட்டார்.
அந்தப் பெண்மணி, “இல்லை, எனது கணவரை என்னுடன் கடைக்கு வருமாறு அழைத்தேன், அவர் மறுத்தார். எனவே என்னால் ஒரு வரம்பிற்குட்பட்டு இதுதான் செய்ய முடிந்தது” என்றார்.
தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தால் அது வரம்பு மீறிய செயல். எனவே உங்களால் செய்யக்கூடிய அற்பமான விஷயம், ரிமோட்டை அங்கிருந்து மறைத்துவிட்டுப் பிறகு மறுபடியும் வைத்துவிடுவது.
(அற்புதமான உறவுகள் அமைய… மதியம் 1 மணிப் பதிப்பில் மேலும் அலசுவோம்…)�,”