இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது.
டாடா குழுமத்தின் ஓர் அங்கமான டாடா கன்சல்டென்ஸி சர்விஸ் நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் 55 நாடுகளில் 3,87,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் 78,192 பேரை டி.சி.எஸ். வேலைக்கு எடுத்துள்ளது. இவர்களில் 11,584 பேரை இந்தியாவிற்கு வெளியில் தேர்வு செய்துள்ளது என்பது அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை டி.சி.எஸ். முன்னணியிலேயே உள்ளது. தி கேம்பிரிட்ஜ் குழுமம் நடத்திய ஆய்வின்படி அமெரிக்காவில் 12,500க்கும் மேற்பட்டவர்களை டி.சி.எஸ். வேலைக்கு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டுகளில் இதன் தொழில் வளர்ச்சி விகிதம் என்பது 57 சதவிகிதமாக இருந்துள்ளது. இது மற்ற நிறுவனங்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுகளை விட அதிகளவிலானோருக்கு வேலை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலாண்டிலும் 800 பதவிகளுக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்காக 3 பில்லியன் டாலர் வரை டி.சி.எஸ். முதலீடு செய்துள்ளது.
இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனத்தின் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவுக்கான தலைவர் சூரிய காந்த் கூறுகையில், அமெரிக்காவில் கணிசமான வேலைவாய்ப்பு வழங்குபவர் மற்றும் திறன் மேம்பாட்டுச் சக்தியாக இருப்பதில் டி.சி.எஸ். பெருமை கொள்கிறது, என்றார்.�,