சசிகலா, டி.டி.வி.தினகரனின் தலைமையை ஏற்காவிட்டால், அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் சிதறிவிடும் என்று நடிகர் செந்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் அதிமுக கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி, புதிய பொறுப்பாளர்களை நியமித்துவருகிறார். இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, நடிகர் செந்திலுக்கு அமைப்புச் செயலாளர் பதவி அளித்தார் தினகரன். நடிகர் செந்திலுக்கு அமைப்புச் செயலாளர் பதவி அளித்தது நகைப்புக்குரியது” என்று திருச்சி எம்.பி. குமார் கூறினார். குமாரின் பேச்சைக் கண்டித்து நடிகர் செந்தில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களிடம் பேசினார்.
“அம்மா (ஜெயலலிதா) சேவல் சின்னத்தில் போட்டியிட்ட காலத்திலேயே நான் அவருடைய கட்சியில்தான் இருந்தேன். ஐசரி வேலன் அதிமுகவில் சேர்ந்தபோதே நானும் கட்சிக்கு வந்துவிட்டேன். அதிமுக கட்சிக்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தேன். எனக்கு கட்சிப் பதவி மிகவும் தாமதமாகத்தான் வழங்கங்கப்பட்டிருக்கிறது. வரலாறு தெரியாமல், எனக்குப் பதவி வழங்கியதைக் குமார் குறை கூறுகிறார். என்னை விமர்சனம் செய்ய அவருக்குத் தகுதி இல்லை. என்னைப் பற்றி மக்கள் எல்லோருக்கும் தெரியும் குமாரை யாருக்காவது தெரியுமா?” என்று செந்தில் கேள்வி எழுப்பினார்.
“அம்மா இருந்தவரை என்னை நம்பினார். அவரது ஆதரவு எனக்கு இருந்தது. கட்சிக்கு உறுதுணையாக இருங்கள் நல்லது நடக்கும் என்று கூறினார். அவர் சொன்னபடியே நான் பிரச்சாரம் செய்தேன். அதிமுகவில் இருந்த நடிகர்கள் எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி ஆகியோருக்கு அம்மா பதவி வழங்கினார். கட்சிக்காகப் பாடுபட்ட எனக்கு தினகரன் பதவி வழங்கியுள்ளார். தினகரன் தலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் குழப்பம் நீங்கும். கட்சி பிழைக்கும். சசிகலா, தினகரன் தலைமையை ஏற்காவிட்டால் அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் சிதறிவிடும்” என்று செந்தில் தெரிவித்தார்.
�,”