�இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபிளிப்கார்ட் தங்களது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும் இ-காமர்ஸ் துறையில் இருக்கும் கடுமையான போட்டி காரணமாகவும் சலுகை விலை விற்பனையை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் 20 முதல் 24 வரை நான்கு நாள்களுக்கு ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை அறிவித்துள்ளது. வழக்கமாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவிக்கின்ற அதிரடி விற்பனை, விற்பனை நாள்களில் பலமடங்கு இருக்கும். பொருள்களின் விலையும் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பொருள்களை ஆர்டர் செய்கின்றனர்.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்கிடம் இருந்து 240 கோடி டாலர் நிதி பெற்றுள்ளது. இதனால் அதிகமாக நிதி பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஃபிளிப்கார்ட் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி ஆஃபர் குறித்து இந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “இந்த பண்டிகைக் காலத்தை மேலும் சிறப்பாக்க விற்பனை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட பொருள்கள், முன்னணி பிராண்டுகளில் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும். 90 சதவிகிதம் வரை ஆஃபர் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா இந்த பண்டிகைக் காலத்தை ‘பிக் பில்லியன் டே’ விற்பனையுடன் கொண்டாட ஃபிளிப்கார்ட் மக்களை அழைக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை திருவிழா என்று ஃபிளிப்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.�,