சிறுவனை மீட்க மாற்று வழிகள் ஏற்பாடு: தொடரும் போராட்டம்!

Published On:

| By Balaji

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்க 13 மணி நேரங்களையும் கடந்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று (அக்டோபர் 25) மாலை சுமார் 5:40 மணியளவில் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, 26 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி. இவர்களது மகன் சுர்ஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் வீட்டருகிலேயே வயலும் வைத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாசனத்துக்காக ஆழ்குழாய் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அந்த ஆழ்குழாய் கிணற்றை மூடிவிட்டாராம். கைவிடப்பட்ட அந்த ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்குழாய் குழியில் மூடியிருந்த மண் உள்வாங்கியது. இதனையறியாமல் அவ்வழியாக விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித், எதிர்பாராதவிதமாக ஆழ்குழாய் கிணறு குழியில் தவறி விழுந்துவிட்டார்.

இதனைக் கண்ட சுர்ஜித்தின் தாய் கலாராணியின் கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர். தகவல் அறிந்து அங்கே விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து சிறுவனை மீட்கும் கடுமையான போராட்டத்தில் இறங்கினர்.

அவ்வப்போது சிறுவன் கைகளை அசைத்த நிலையில், குழாய் மூலம் குழந்தைக்கு சுவாசிப்பதில் தடை ஏற்படாதவாறு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைக்கு தைரியமூட்டவும் பதற்றமடையாமல் பார்த்துக் கொள்வதற்காகவும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் பேசுவதைக் கேட்டு குழந்தையிடம் இருந்து பதில் குரல் வந்தது. தொடர்ந்து அவரை மீட்கும் பணி துரித்தப்படுத்தப்பட்டது.

அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாகச் சென்று குழந்தையை மீட்க முயற்சித்தனர். ஆனால் சிறிது தூரம் குழி தோண்டப்பட்டதன் பின்னர் பாறைகள் தென்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆழ்துளைக் கிணறுகளுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்பதற்கென மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி சம்பவ இடத்திற்கு எடுத்துவரப்பட்டது. அதனைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த கருவி 26 அடி ஆழத்தில் இருக்கும் அந்த குறுகலான குழிக்குள் முழுவதுமாகச் சென்று குழந்தையின் அருகில் செல்ல முடியவில்லை. சுர்ஜித்தை சற்று மேலே தூக்கிவிட்டால், இடுக்கி போன்ற அந்த கருவி மூலம் அவரை மீட்டுவிட முடியும் என்பதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

குழந்தையின் கைகளில் கயிற்றைக் கட்டி அவரை மேலே தூக்க முயற்சித்தனர். விரைவில் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்னும் ஏக்கதோடு அனைவரும் காத்திருந்தனர். ஏழு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியும் குழந்தையின் ஒரு கையில் மட்டுமே சுருக்கு போட முடிந்தது. இரவு ஒரு மணியைக் கடந்தும் மறு கையில் சுருக்குப் போட அனைவரும் தீவிரமாக முயற்சித்து வந்தனர்.

பெரும் பயத்தில் இருந்த குழந்தை அழுதுகொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல அவர் சோர்வடைய ஆரம்பித்தார். 7 மணி நேரமாகியும் குழந்தை மீட்கப்படாத பயத்தில் குழந்தையின் அம்மாவும் மிகவும் பயந்துபோனார். எனினும் குழந்தைக்கு தைரியமுட்டும் விதமாக, ‘அம்மா மேலே இருக்கிறேன். பயப்படாதே!’ என்று கூறியதற்கு குழந்தையிடமிருந்து ‘உம்’ என்று முனகல் சத்தமாய் வந்த பதில் அனைவருக்கும் நம்பிக்கையைத் தந்தது. தொடர்ந்து குழந்தையை மீட்க போராடினர்.

இதையடுத்து கோவையில் இருந்து மற்றொரு மீட்புக்குழுவினர் வருகை தந்தனர். 6 முறை முயன்றும் குழந்தையின் கைகளில் சுருக்கு மாட்ட முடியவில்லை. இந்த நிலையில் அருகாமையில் வேறொரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்க மீண்டும் முயற்சித்தனர்.அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஐஐடி குழுவினர் நவீன கருவி ஒன்று கொண்டு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழ்விடத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் இருந்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குழந்தையை மீட்கும் பணியில் பதின்மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் ஈடுபட்டிருக்கும் நிலையில் 26 அடி ஆழத்தில் சிக்கி இருந்த அவர் துரதிர்ஷ்டவசமாக 70 அடி ஆழத்திற்கு கீழே தள்ளப்பட்டார். இது அனைவருக்கும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த 70 அடி ஆழத்திலும் குழந்தையின் அழுகுரலும் மூச்சுவிடும் சத்தமும் கேட்டதால் குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளில் மீண்டும் மனந்தளராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணியைக் கடந்தும் அவரை எப்படியும் மீட்டுவிட முடியும் என்று நம்பிக்கையுடன் போராடி வருக்கின்றனர்.

ஒட்டுமொத்த தமிழகமும் சுர்ஜித்தின் உயிரை மீட்க வேண்டுதல்களுடன் காத்திருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share