ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்ததையடுத்து, அங்கு ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதால், பாகிஸ்தான் ராணுவம் எந்த நேரத்திலும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் இருந்துவந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்கார் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள், இந்தியர் ஒருவர் என மூவர் பலியானதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் இரண்டு வீடுகளும் சேதமடைந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கார் பகுதிக்கு எதிரேயுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதலை நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 முதல் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பீரங்கித் தாக்குதலில் நீலம் பகுதியில் உள்ள 4 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.�,