aமூட நம்பிக்கையால் உயிரிழந்த இருவர்!

Published On:

| By Balaji

மூட நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி, வீட்டுக்கு அருகில் 50 அடி ஆழத்துக்கும் மேல் குழிதோண்டி கடைசியில் புதையல் எடுக்கமுடியாமல், இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்தையா (65), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவாதேவி (42) என்ற மகளும், சிவமாலை (40), சிவவேலன் (37) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முத்தையா வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் புதையல் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து சிவமாலை, சிவவேலன் ஆகியோர் தனது நண்பரான ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ரகுபதி (47) என்பவரிடம் இதுகுறித்து கூறினர். பின்னர் குழிதோண்டி புதையலை எடுக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்கு துணையாக பன்னம்பாறையைச் சேர்ந்த நிர்மல் கணபதி (18) என்பவரையும் தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இவர்கள் 4 பேரும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமிபூஜை போட்டு குழி தோண்டியுள்ளனர். 5 அடி அகலத்திற்கு 20 அடி ஆழமும், 4 அடி அகலத்திற்கு 25 அடி ஆழமும், பக்கவாட்டில் 7 அடி வரையும் குழி தோண்டினார்கள். இந்த பணி தினமும் நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சிவமாலை, சிவவேலன், ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் குழி தோண்டுவதற்காக ஏணி வழியாக குழிக்குள் இறங்கினார்கள். மாலையில் திடீரென்று அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையே சிவவேலன் மனைவி ரூபா தண்ணீர் கொடுப்பதற்காக ஏணி வழியாக குழிக்குள் இறங்கினார். அப்போது, அங்கு 4 பேரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது குழி தோண்டும் பணி யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக வீட்டின் காம்பவுண்டு சுவர் சுற்றியும் பிளாஸ்டிக் சீட் வைத்து மறைத்து இருந்ததுடன், குழியின் மேல் பகுதியும் மூடி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி குழிக்குள் இறங்கினார்கள். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் வெளியே தூக்கி வந்து, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவமாலை, சிவவேலன் ஆகியோருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் , எஸ்பி இன்று விசாரணை நடத்தினர்.

புதையலுக்காக குழி தோண்டி உயிரிழந்தவரின் பெற்றோரிடமும் அவரது நண்பரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் . இதில் கேரள மாந்திரீகரிடம் ஜோதிடம் கேட்டதில், அவர் இந்த இடத்தில் பல லட்சம் மதிப்பிலான தங்கபுதையல் இருப்பதாக கூறியுள்ளார். அதனால், அவர்கள் புதையலை எடுக்க குழி தோண்டியது தெரியவந்துள்ளது .

தீயணைப்பு துறையினர் புதையலுக்காக தோண்டிய குழிக்குள் இறங்கி குழியின் ஆழத்தை அளந்து பார்த்தபோது 50 அடிக்கு மேல் ஆழம் இருந்தது தெரியவந்துள்ளது குழி உள்ள பகுதியில் யாரும் சொல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து உள்ளனர்.

** -சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share