கலிஃபோர்னியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பாத்திமா மாட்ரிகள் – ராபர்ட் ட்ரூஜிலோ தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்தக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடங்களில் பிறந்திருப்பது பலரை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது
ஒரு குழந்தை 2021 டிசம்பர் இரவு 11.45 மணியளவிலும், மற்றொரு குழந்தை 15 நிமிடங்கள் கழித்து, 2022 புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்தனர். இதனால் இரட்டைக் குழந்தைகளை வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு மாதத்தில், வெவ்வேறு வருடத்தில் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அந்தத் தாய். இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆண், மற்றொரு குழந்தை பெண்.
இதுகுறித்து பாத்திமா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வெளியிட்ட பதிவு உலகம் முழுவதும் வைரல் ஆனது. அந்தப் பதிவில், ‘அய்லின் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார். அவளுடைய சகோதரன் ஆல்பிரடோ அந்தக் குழந்தைக்கு 15 நிமிடங்களுக்கு முன் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தார்’ என்று குறிப்பிடப்பட்டு குழந்தைகளின் போட்டோவையும் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து குழந்தைகளின் தாய் பாத்திமா பேசியபோது, “எனக்கு இரு வேறு வருடங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த விஷயம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளின் புகைப்படத்தை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்தும், அவர்களுக்கு வாழ்த்துக் கூறியும், இது அதிசயமான நிகழ்வு என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஆனா அபிரில் அரியஸ் கூறுகையில், “இது என்னுடைய மருத்துவ வாழ்க்கையில் மறக்கமுடியாத பிரசவம். புத்தாண்டை இதைவிட சிறப்பாக யாரும் வரவேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பாத்திமா தம்பதியினருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,”