ஐபிஎல்: டிவி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் தொகை ரூ.36,000 கோடி!

Published On:

| By Balaji

ஐபிஎல் டி20 கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு, 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனாவால் இந்தியாவில் நடத்த முடியாத நிலையில் ஐக்கிய அமீரகத்தில் தொடர்ந்து நடத்தியது. 2018ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347 கோடிக்குப் பெற்றது. இந்த நிலையில் இதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டிவி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை (2023ஆம் ஆண்டில் இருந்து 2027 வரை) வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் இப்போதே ஆர்வம்காட்டுகின்றன.

மேலும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருவதால் ஆட்டங்களும் 60இல் இருந்து 74 ஆக அதிகரிக்கிறது. இதனால் இந்த முறை ஐபிஎல் ஒளிபரப்புக்கான டிவி ஒளிபரப்பு உரிமத்தொகை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரூ.30,000 கோடி முதல் ரூ.36,000 கோடி வரை ஒளிபரப்பு உரிமத் தொகையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அடுத்த ஐபிஎல்லில் இடம்பெறும் இரண்டு புதிய அணிக்கான உரிமம் யாருக்கு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த வாரம் அறிவிக்க உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் ஐபிஎல் அணியில் முதலீடு செய்வதற்காக அதற்கான டெண்டர் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர். புதிய இரு ஐபிஎல் அணிகளும் ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share