தூத்துக்குடி: மின் உற்பத்தியில் நீடிக்கும் சிக்கல்!

Published On:

| By admin

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9,000 டன் ஆகும். இந்த நிலையில் கடந்த வாரம் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 மற்றும் 4ஆவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1, 2 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மூன்று யூனிட்டுகளிலும் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இங்கு மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக வ.உ.சி. துறைமுகத்துக்கு நிலக்கரி கொண்டு வரப்பட்டு, கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக அனல் மின் நிலையத்துக்குள் நிலக்கரி கொண்டு செல்லப்படும்.
கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், அனல் மின் நிலையத்தில் உள்ள அனைத்து எந்திரங்களையும் முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் அனல் மின்நிலையத்தில் உள்ள ஒன்றாவது மின் உற்பத்தி எந்திரத்தை தவிர மற்ற நான்கு மின் உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மதியத்துக்கு பிறகு மற்ற எந்திரங்கள் படிப்படியாக இயங்க தொடங்கியுள்ளன. மாலையில் ஐந்தாவது எந்திரத்தை தவிர மற்ற நான்கு மின் உற்பத்தி எந்திரங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அனல் மின் நிலையத் தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார், “அனல் மின்நிலையத்தில் 8,000 டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இதை இங்கு உள்ள நான்கு மின்சார உற்பத்தி எந்திரங்களில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வருகிறது” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share