Gஸ்டெர்லைட்: என்ன நடக்கும்?

public

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டங்களும் வழக்குகளும் 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1998ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018ஆம் ஆண்டில் ஆலை மூடியே இருக்கட்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 1997ஆம் ஆண்டு நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டு 190 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், 2013இல் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டபோதும், **2018இல் துப்பாக்கிச் சூடு வன்முறையில் 16 பேர் கொல்லப்பட்ட போதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.** இப்போது இன்னொரு வழக்கில், தூத்துக்குடி மக்களும், சூழியல் ஆர்வலர்களும், வேதாந்தா நிறுவனமும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மக்களின் நூறு நாள் அறவழிப் போராட்டம், 2018 மார்ச் 24 நடைபெற்ற பொதுக்கூட்டம், 2018 மே 22 அன்று நடந்த ஊர்வலம், துப்பாக்கிச்சூடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்பு தமிழர்கள் இடையே அதிகரித்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 24.05.2018 அன்று முதல் ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது என்று 28.05.2018 அன்று அரசாணை வெளியிட்டார்.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து ஆலையின் பிரதான வாயில் மூடப்பட்டது. பின்வாசல் வழியாகப் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.

**அனுமதியும் தடையும்**

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. பசுமைத் தீர்ப்பாயம் தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் **ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்தது**. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த வழக்கில் மனுதாரராக வாதாடினார். அவ்வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் **தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை உத்தரவு போட்டது.** ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்கும் முயற்சியில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம். ஆனால், அந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை வழங்கியது.

இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பேரா.பாத்திமாபாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக்குரைஞர் அரிராகவன் ஆகியோர் தங்களையும் மனுதாரர்களாக இணைத்துக்கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019 பிப்ரவரி மாதம் தொடுக்கப்பட்ட வழக்கு, மார்ச் மாதம் நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி பி.நிர்மல்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பி.டி.ஆஷா மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், இவ்வழக்கை தான் விசாரிக்க இயலாது என்று நீதிபதி கே.கே.சசிதரன் வழக்கில் இருந்து விலகிவிட்டார். அதனால், மீண்டும் விசாரணை அமர்வு மாற்றப்பட்டு, நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. 2019 ஜூன் 27 முதல் தமிழக அரசுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் வழக்கில் வாதங்கள் நடைபெற்றது. விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடையே நீதிபதிகள் மாற்றங்கள் நடந்த காரணத்தால், நீதிபதி சிவஞானம், நீதிபதி ஆர்.தரணி அமர்வில் வழக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், மனுதாரர், எதிர் மனுதாரர்கள் இருதரப்பும் பழைய அமர்வே விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதியிடம் முறையிட்டதால், மீண்டும் நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வே விசாரிக்க, அப்போதைய செயல் நீதிபதி வினீத் கோத்தாரி உத்தரவிட்டார். மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் 16.12.2019 முதல் வழக்கு விசாரணை தொடங்கி நாள்தோறும் இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது.

08.01.2020 அன்றுடன் வாதங்கள் நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கால் தீர்ப்பு வெளியாகும் நாள் தாமதமானது. இப்போது தீர்ப்புக்காக வழக்கு பட்டியலிடப்பட்டுவிட்டது.

”ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஐநூறு கோடி ரூபாய் நலத்திட்டங்களை தூத்துக்குடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். 2018 மே 22 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவதற்காக, அரசு கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதனால், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இதற்குப் பதில் அளிக்கின்ற வகையில், ”ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, 1994ஆம் ஆண்டு மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம், ஆண்டுதோறும் இரண்டாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. அதனால், இருபத்தி இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. தமிழக அரசின் கள ஆய்வின்படியும், அறிவியல்பூர்வமான ஆய்வுகளின்படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் நீர், நிலம், காற்று, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலையை உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது, அதனால், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து, உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறைவு பெற்று இன்று (18.08.2020) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

**விசாகப்பட்டினம் ஆலையில் நடைபெற்ற விபத்தின் நினைவுகள் இன்னும் மறையவில்லை.** அதனால், இயற்கையை நேசிப்பவர்கள், சூழியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் ஸ்டெர்லைட் வழக்கில் அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்புண்டு. தமிழக அரசின் குத்தகை நிலத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் ஒருகாலமும் விரும்பாது. ஏனென்றால் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகமும், தாமிரபரணி ஆற்றின் நீரும், போக்குவரத்து, தொழில்நுட்ப வசதிகளும் வேறு ஒரு இடத்தில் கிடைக்காது.

**நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டால், கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது.** தமிழக அரசு தரப்பில் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க முடியும். தற்போதைய மத்திய அரசின் சுற்றுச்சூழல் வரைவு EIA2020 மற்றும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையிலான சலசலப்புகள், அமைச்சர்களின் பேச்சுகள் காரணமாக அமைச்சரவை அவசரமாகக் கூடுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை. தீர்ப்பு எப்படி வந்தாலும் அரசியல் பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *