தமிழகத்தில் ஒரு வாரத்தில் இரு என்கவுன்ட்டர்!

Published On:

| By Balaji

தூத்துக்குடி அருகே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் மீது, தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இந்த சூழலில் தென்காசி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரைக் கொலை செய்து புதைத்த வழக்கில் போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் துரைமுருகன் முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்குச் சென்று அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு துரைமுருகன் தப்ப முயன்றதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயகுமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து துரைமுருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தூத்துக்குடியில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் ஒருவரிடம் செயினை பறித்துக் கொண்டு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share