தூத்துக்குடி வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வனத்துறையுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்து தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்.
2012 நவம்பர் 24ஆம் தேதி ஏரல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வினோத், ராமச்சந்திரன் என்ற இருவர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில், மேலமங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த துரைமுத்துவை சந்தேகிக்கப்படும் நபராக அறிவித்து போலீசார் தேடி வந்துள்ளனர். அதுபோன்று திருநெல்வேலியில், ஒரு கொலை வழக்கிலும் போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், மணக்கரை வனப் பகுதியில் ரவுடி துரைமுத்து உட்பட சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ஆழ்வார் திருநகரி காவல்துறை துணை ஆய்வாளர் முருகபெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு துரைமுத்து வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, தென்மண்டல ஐஜி முருகன் கூறுகையில், “ரவுடி துரைமுத்துவை பிடிப்பதற்காக, எஸ்.ஐ முருகபெருமாள் தலைமையில் 7 காவலர்கள் சென்றனர். துரைமுத்து மேல் 3 கொலை வழக்கு உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவர் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி.
அவரை தேடிச் சென்ற போது, வனத்துறைக்குச் சொந்தமான கட்டிடத்தில், 4 பேர் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, மூன்று பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். அந்த மூவரிடம் விசாரித்ததில் தப்பிச் செல்பவர் தான் துரைமுத்து என்று தெரிவித்துள்ளனர்.
**தலை சிதறி காவலர் உயிரிழப்பு**
அப்போது காவலர் சுப்பிரமணியனும், மற்றொரு காவலரும் துரைமுத்துவை பிடிக்க துரத்திச் சென்ற போது, துரைமுத்து கையில் வைத்திருந்த பையிலிருந்து வெடிகுண்டை எடுத்து வீசுகிறார். அவர்கள் ஓடும் பகுதி சமமான பகுதியாக அல்லாமல், மேடு பள்ளமாக இருந்துள்ளது. சுப்பிரமணியன், துரைமுத்துவை கீழே தள்ளிப் பிடிக்க முயன்றுள்ளார். **மேடுபள்ளமான தரையில் இருவரும் கட்டி புரளும்போது வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் சுப்பிரமணியன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.**
துரைமுத்துவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு துரைமுத்துவும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார்.
**ரவுடிக்கும், வனத்துறைக்கும் தொடர்பா**
துரைமுத்துவுக்கும் வனத்துறையினருக்கும் தொடர்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஐஜி முருகன், “துரைமுத்து, அவருடைய உறவினர் சுடலைக் கண்ணன். சிவராமலிங்கம் ஆகியோரை போலீசார் பிடிக்கச் சென்றுள்ளனர். இதில், **சுடலைக் கண்ணன் வனத்துறை பணியாளராக உள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்**” என்று தெரிவித்தார்.
துரைமுத்து மீது நாட்டு வெடிகுண்டை போலீசார் வீசியதாகக் கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “காவல்துறை குண்டை வீசியதாகச் சொல்வது தவறு. அப்படியிருந்தால் காவலர் இறந்திருக்க மாட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படும் ” என்றார்.
எதற்காக 4 பேரும் அந்த பகுதியில் தங்கிருந்தனர் என்ற கேள்விக்கு, “ஏதோ ஒரு மிகப் பெரிய குற்றத்தைச் செய்வதற்காகக் கூடியிருந்தபோது தகவல் அறிந்து காவலர்கள் குறிப்பிட்ட வனப் பகுதிக்குச் சென்றனர்” என்று குறிப்பிட்டார்.
**தூத்துக்குடியில் வெடிகுண்டு கலாச்சாரமா?**
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் உள்ளதா என்ற கேள்விக்கு, வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. **இவர்களுக்கு வெடிகுண்டு எப்படிக் கிடைத்தது என்று விசாரித்து வருகிறோம். இந்த தேடுதல் நடவடிக்கைக்கு காவலர்கள் போதுமான முன்னெச்சரிக்கையுடன்தான் சென்றனர்.** காவலர்கள் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால், யார் மீது படும் என்பது தெரியாததால் அதனைப் பயன்படுத்தவில்லை. துரைமுத்துவை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார் ஐஜி முருகன்.
**ரூ.50 லட்சம் இழப்பீடு**
வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த ஆழ்வார் திருநகரி முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்துக்கு **50 லட்ச ரூபாய் நிவாரண உதவி** வழங்குவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
**இழப்பிலிருந்து எப்படி மீண்டு வருவோம்**
காவலர் சுப்பிரமணியனின் அண்ணன் சித்தார்த் கூறுகையில், **எப்போதும் வேலையில் தம்பி நேர்மையாக இருப்பான்.** இரவு எந்த நேரத்திற்கு போன் வந்தாலும் உடனே செல்வான். அவனுடைய ஊதியத்தை வீட்டில் கொடுத்துவிட்டு, 100 ரூபாய் வேண்டுமென்றால் கூட எங்களிடம் தான் கேட்டு வாங்கிச் செல்வான், **இந்த இழப்பிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியவில்லை** என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,”