தூத்துக்குடி அருகே டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாகக் கூலி வேலைக்குச் சென்ற பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மணப்படை வீடு, திருமலை கொழுந்துபுரம், மணல்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள், டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் இன்று காலை வேலைக்குச் சென்றிருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்கு சென்றிருக்கின்றனர்.
டாட்டா ஏஸ் ஆட்டோவை திருமலைகொழுந்து புரத்தைச் சேர்ந்த சித்திரை என்பவர் இயக்கியிருக்கிறார். மணியாச்சி காவல் நிலையத்திற்கு அருகே சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்கிருந்த பாலத்தில் மோதி காட்டாற்று ஓடையில் கவிழ்ந்துள்ளது.
இதில் வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மூச்சுத்திணறி திருநெல்வேலி மணப்படை வீடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பேச்சியம்மாள்(30), ஈஸ்வரி(27), மலையரசி(48), பேச்சியம்மாள்(54), கோமதி(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணியாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், உள்ளிட்ட போலீசார் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு டாட்டா ஏஸ் வாகனத்தை மீட்டு அடியில் சிக்கியிருந்த பெண் தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து ஓட்டுநர் சித்திரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்குச் செல்பவர்கள், பலர் இணைந்து விலைபேசி ஒரு வாகனத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் உரியப் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
**-பிரியா**�,