நாஞ்சில் நாட்டு சமையலில் அவியல் தனிச்சுவையுடன் இருப்பதற்காக புத்தம் புதிய பச்சைச் சுண்டைக்காயும் சேர்த்து சமைக்கிறார்கள். அத்துடன் துருவிய தேங்காயையும் அள்ளிப் போடுகிறார்கள். தேங்காய் எண்ணெய் சேர்த்து அவியலைக் கடைசியாகக் கமகமவெனப் புரட்டி எடுக்கிறார்கள்.
**என்ன தேவை?**
பச்சை சுண்டைக்காய் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 15
புளி – சிறிய உருண்டை
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**அரைக்க…**
தேங்காய்த் துருவல் – அரை கப்
சின்ன வெங்காயம் – 3 (தோலுரிக்கவும்)
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
பச்சை சுண்டைக்காயின் காம்புகளை நீக்கி நன்கு கழுவிக்கொள்ளவும். பின்னர் ஒரு குழவிக்கல்லை வைத்து தட்டிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கனமான கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.சுண்டைக்காய் நன்கு வதங்கி நிறம் மாறியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து வேகவிடவும். சுண்டைக்காய் நன்கு வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கவும். வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, சூடான அவியலில் கலந்து மூடி வைக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: பட்டாணி தேங்காய்ப்பால் கறி](https://minnambalam.com/public/2021/11/18/1/peas-coconut-mil-curry)**
.�,