~விருப்பமனு: தினகரன் கட்டணம் வசூலிக்காத காரணம்!

Published On:

| By Balaji

திருச்சியில் நடைபெற்ற அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய தினகரன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம், எதிரிகளையும் துரோகிகளையும் பந்தாடவேண்டும் என்று பேசியுள்ளார்.

இன்று (நவம்பர் 22) காலை திருச்சி பெமினா ஹோட்டலில் உள்ள காவிரி அறையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சங்கம் ஹோட்டலில் முன்கூட்டியே வந்து ஓய்வெடுத்தவர், கூட்டத்திற்கு அனைவரும் வந்துவிட்டார்களா என்று விசாரித்து, மதியம் 12 மணிக்குக் கூட்டம் நடைபெறும் அறைக்கு வந்தார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத்தவிர வேறுயாருக்கும் அனுமதியில்லை, கூட்டம் சரியாக 12.15 மணிக்குத் துவங்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ,ரங்கசாமி, வெற்றிவேல், மனோகரன், உமாதேவன், கடலூர் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் மட்டுமே பேசினார்கள்.

பழனியப்பன் பேசும்போது, “நம்மை எதிர்க்க திமுக, அதிமுகவும் மறைமுக கூட்டணியை அமைத்துள்ளார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும், ஏழையாகவிருந்தாலும் அனைவரும் இறுதியாக போகிற இடம் ஒன்றுதான். எனவே பணம், பதவி பற்றிக் கவலைப்படாமல் ஏற்றுக்கொண்ட தலைமைக்காக இறுதிவரையில் விசுவாசமாக இருக்கவேண்டும். அடிமைகள் ஆளும்போதே விழுந்து கிடக்கிறார்கள். என் தலைவர் தோல்வியிலும் கம்பீரமாய் நிற்கிறார்” என்று பழனியப்பன் பேசியது தினகரனைத் திகைக்கவைத்துவிட்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயா தொலைக்காட்சியில் தினகரன் உரையை நேரலை செய்தார்கள்.

இறுதியில் தினகரன் பேசியபோது, “வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில், எதிரிகளையும் துரோகிகளையும் பந்தாடவேண்டும். வெறுப்பு விருப்பு இல்லாமல் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். விலைபோகாத நல்ல வேட்பாளர்களை உங்களால்தான் தேர்வுசெய்யமுடியும். எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர் என்றால் நாங்கள் தேர்வு செய்வோம்.

கட்சியில் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விருப்ப மனு வாங்கலாம். விருப்ப மனு வாங்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கவேண்டாம், அப்படி வசூலித்தால் அது ஒரு பிரச்சினையாக உருவாகும். நாம் இன்னும் கட்சி பதிவுசெய்யவில்லை. கட்சி பதிவுசெய்யாமல் வங்கியில் கணக்கு துவக்கமுடியாது. எனவே விருப்ப மனுவுக்குக் கட்டணம் வாங்க வேண்டாம்.

சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உள்ளாட்சியில் போட்டியிடுவோம். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட சின்னங்கள் பட்டியலில் நாம் ஏற்கனவே போட்டியிட்ட குக்கர் சின்னமும், பரிசு பெட்டி சின்னமும் இடம்பெறவில்லை. கிடைக்கும் சின்னத்தை வைத்து வெற்றிபெறுவோம் ”என்று பேசினார் டிடிவி தினகரன்.

மாவட்டச் செயலாளர்கள், “தலைவர் முகத்துல இங்கதான் சிரிப்பைக் காணமுடிகிறது. வீட்டிலிருக்கும்போது கோபத்தைத்தான் பார்க்கமுடிகிறது” என்று புலம்பிக்கொண்டே நகர்ந்தார்கள்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் அமமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share