பாலியல் வழக்கு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) நிறுத்தி வைத்தது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரெக்டே(39), பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியைக் கொய்யாப் பழம் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியின், மார்பகத்தை தொட்டு பாலியல் தொந்தரவு செய்து ஆடையை அவிழ்க்க முயன்றிருக்கிறார். இதனால் சிறுமி அழ ஆரம்பித்ததால் வீட்டுக்குள்ளே வைத்துப் பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார். இதையடுத்து அழுகை குரல் கேட்டு ஓடி வந்த அவரது தாய், சிறுமியை மீட்டிருக்கிறார்.
இதுகுறித்து சதீஸ் ரெக்டே மீது சிறுமியின் பெற்றோர் நாக்பூர் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சதீஸ் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து சதீஸ் ரெக்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. “போக்சோ சட்டத்தில், பாலியல் நோக்கத்துடன் ஒருவரைத் தோலுடன் தோல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது. போக்ஸோ சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் பாலியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றம் அல்ல’ என்று வழங்கிய தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானது.
நாட்டில் பெண்களும், சிறுமிகளும் வெளியில் செல்லும் போதும், அக்கம் பக்கத்தினராலும் பாலியல் தொந்தரவுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்குப் பெண்கள் அமைப்பினர், நீதித் துறையைச் சார்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராகத் தேசிய பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் உச்ச நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு சென்றார். மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, முன்னெப்போதும் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டதில்லை. இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு அனுமதி வழங்கியது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
**-பிரியா**
�,