பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் : போக்குவரத்து துறை அறிவுறுத்தல்!

Published On:

| By Balaji

அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அனைத்து மேலாண் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.

அதில், மாற்றுத் திறனாளி பயணிகள் பேருந்திற்காக பேருந்து நிறுத்ததில் நிற்கும்போது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத் திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அது ஒருவராக இருந்தாலும் சரி.

ஓட்டுநர் பேருந்தை, பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

நடத்துநர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை பேருந்திலிருந்து இறக்கிவிடக் கூடாது.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பயணிகள் வேறு யாராவது அமர்ந்து இருந்தால், அவர்களை இருக்கையில் இருந்து எழ செய்து, மாற்றுத் திறனாளியை அமர வைக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.

அவர்களை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும்.

மாற்றுத் திறனாளி பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டையை பார்த்து ஆய்வு செய்து உரிய இலவச பயணச் சீட்டினை வழங்க வேண்டும்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel