கவனக் குறைவு, அதிவேகம், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வாகனத்தை இயக்கும்போது செல்போன் பேசக் கூடாது என்று அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், அதை பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை.
இந்த நிலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்களை போக்குவரத்து துறை வழங்கியுள்ளது.
அதில், ஓட்டுநர்கள் பணியின்போது சட்டையில் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும். இது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடத்துநர் பகலில் முன் இருக்கையில் அமராமல் பேருந்தின் பின்புறம் உள்ள பின் இருக்கையில் இருந்து அமர்ந்து கொண்டு, படிக்கட்டுகளில் யாரேனும் பயணம் செய்கிறார்களா என்பதனையும், பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். தொலைதூர பேருந்துகளில் இரவு 11 முதல் காலை 5 மணி அளவில் முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர் பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும் பணி நேரத்தில் ஓட்டுநர் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, நடத்துநர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டாலோ சட்ட பிரிவின் மூலம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**