டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஷாஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டெல்லி வன்முறை தொடர்பான இடைக்கால மனுவும் நீதிபதிகள் சஞ்சய் கிசான் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைநகரான டெல்லியில் இதுபோன்று வன்முறை நடைபெற்றது என்பது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் குற்றங்கள் நடந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா காவல்துறையினரிடமிருந்து இந்தியக் காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார். காவல்துறையினர் சரியாகச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற மிக மோசமான வன்முறை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள் காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கும் கேள்வி எழுப்பினர்.
வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடிப்பதற்கு முன்னர் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் டெல்லி காவல் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் கட்சியினர் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும், வன்முறையாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, வன்முறை குறித்து விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ஷாஹீன் பாக் தொடர்பான வழக்கை விசாரிக்க இது தகுந்த சூழல் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**கவிபிரியா**�,