மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்: போலீஸார் அறிவுரை!

Published On:

| By Balaji

கைது செய்யப்பட்ட மதனின் யூடியூப் சேனல்களை முடக்கிய போலீஸார் பப்ஜி விளையாட்டை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

சட்டவிரோதமாக பப்ஜி விளையாட்டை விளையாடி, அதை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பி வந்த மதன், சிறுவர், சிறுமிகளிடம் பெண்களைப் பற்றி ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி வந்துள்ளார். இதுகுறித்தான புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், தர்மபுரியில் தலைமறைவாக இருந்த மதனை கைது செய்தனர். இதையடுத்து, மதன் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, அவரது லேப்டாப்களில் பதிவு செய்து வைத்திருந்த 700 ஆபாச வீடியோக்களும், யூடியூப் மூலம் வெளிவராமல் முடக்கப்பட்டதையடுத்து, யூடியூப் நிறுவனத்துக்கு மதனின் யூடியூப் சேனல்களை முடக்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தை சைபர் கிரைம் போலீஸார் அனுப்பி இருந்தனர்.

மதனின் யூடியூப் சேனல்களை ஆய்வு செய்த போலீஸார், ஓராண்டுக்கு முன்பு வரை பதிவு செய்திருந்த வீடியோக்களை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கினர். தொடர்ந்து, பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை முடக்கிய சைபர் க்ரைம் போலீஸார், அந்தப் பக்கத்தை காண வருபவர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், “பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு, படிப்பில் கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share