ரிலாக்ஸ் டைம்: டோஸ்டு பொட்டேட்டோஸ்!

Published On:

| By Balaji

உலகின் பஞ்சத்தைப்போக்கும் உணவுப்பொருட்களில் உருளைக்கிழங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் பசியைச் சட்டென்று அடக்கும் சக்தியும் உருளைக்கு உண்டு. ரிலாக்ஸ் டைமில் பாக்கெட் சிப்ஸ் அயிட்டங்களைத் தவிர்த்து, வீட்டிலேயே இந்த டோஸ்டு பொட்டேட்டோஸ் செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

மூன்று உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்து தோல் சீவி விரல் வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, தேவையான உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இந்த உருளைக்கிழங்குத் துண்டுகளுடன் தயாரித்து வைத்துள்ள சோள மாவு – மைதா மாவு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு டீஸ்பூன் சோள மாவில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய ஒரு டீஸ்பூன் இஞ்சி, ஒரு டீஸ்பூன் பூண்டு, ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் இரண்டு டீஸ்பூன் தக்காளி கெட்சப், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் வினிகர், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையைப் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். ஒரு டீஸ்பூன் சோள மாவை தனியாக எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து அதைக் கொதிக்கும் இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறவும். பின்னர் பொரித்து வைத்துள்ள உருளை துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சிறிதளவு வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

**சிறப்பு**

கார்போஹைட்ரேட் சத்துகள் நிறைந்த உருளைக்கிழங்கு அதிக சக்தியை உடனடியாக அளிக்கும். எனவேதான், கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share