டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4இல் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருப்பதாக இதுவரையில் 14 நபர்களைக் கைது செய்துள்ளார்கள் டிஜிபி ஜாபர்சேட் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார்.
ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்; பெரும்பாலும் மேஜிக் பேனா பயன்படுத்தியுள்ளார்கள்; அந்த பேனா மை மூன்று மணி நேரத்தில் அழிந்துவிடும்; அந்த வினாத்தாளில்தான் அதிகாரிகள் உதவியுடன் திருத்தி தேர்ச்சி பெறவைக்கிறார்கள்; உயர் அதிகாரிகளுக்கும் பங்களிப்பு இருக்கிறது என்று செய்திகள் பரவி வருகின்றன.
போலீஸ்காரர் சித்தாண்டி, அவரது மனைவி பிரியா, தம்பி வேல்முருகன், அவர் மனைவி, இன்னொரு தம்பி கார்த்தி தேர்ச்சி பெற்றது, இடைத்தரகர் ஜெயக்குமார் உட்பட சிவகங்கை மாவட்டத்தை மையமாக வைத்துதான் விசாரணை வளையம் இருந்துவருகிறது.
சிபிசிஐடி டிஜிபியான ஜாபர்சேட், எஸ்பிகள் மற்றும் டிஎஸ்பிகளுக்கு முக்கிய வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களையும் முடுக்கிவிட்டு விசாரணையைக் கண்காணித்து வருகிறார்.
2019 செப்டம்பர் 1ஆம் தேதி, குரூப் 4 தேர்வு எழுதிய, பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் பேசினோம். “பெயர், ஹால் டிக்கெட், போட்டோ ஆகியவற்றை பரிசோதனை செய்து உள்ளே அனுமதிப்பார்கள். பேனாவையெல்லாம் செக்கப் செய்ய மாட்டார்கள். விடைத்தாளை ஓஎம்ஆர் ஷீட் என்று சொல்வார்கள். மூன்று மணி நேரம் டைம். தேர்வு அறையில் இரண்டு மேற்பார்வையாளர்கள் இருப்பார்கள். ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்குவார்கள். பிறகு விடைத் தாளில் தேர்வு எழுதுபவரும், மேற்பார்வையாளரும் கையெழுத்துப் போட வேண்டும். கடைசியாக பேப்பர் கொடுக்கும்போது எத்தனை கேள்விக்குப் பதில் எழுதியிருக்கிறோம் என்று மேலே எழுதிக் கொடுக்க வேண்டும்” என்கிறார்.
தேர்வு அறையில் மேற்பார்வையாளராகப் பணி செய்த பேராசிரியர் ஒருவரிடம் கேட்டோம். “வினாத் தாள்களைப் பெற்று அதன் பிறகு ஏபிசி எனப் பிரித்து அடுக்கி பார்சல் செய்வோம். அப்போது மூன்று மணி நேரத்தில் அழிந்துள்ள ஓஎம்ஆர் ஷீட் தெரியும்” என்றார்.
சிபிசிஐடி வட்டாரத்தில் விசாரித்தோம். “சைனாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய மேஜிக் பேனா பெரும்பாலான கடைகளில் இல்லை என்று சொல்வார்கள். சில மேஜிக் பேனா வருகிறது. அதனால் எழுதினால் தெரியாது. ஆனால் செல் லைட் அடித்து பார்த்தால்தான் தெரிகிறது.
பிரச்சினைக்குள்ளாகிற வினாத்தாள்களைப் பார்த்தாலே தெரிகிறது… மஞ்சள் கலரில் லேசாகத் தெரிகிறது, இதை எப்படிக் கண்டுபிடிக்காமல் விட்டார்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என்ற குழப்பங்களும் எங்களுக்குத் தீராமல் இருந்துவருகிறது, இருந்தாலும் எங்கள் விசாரணை இன்னும் முடியவில்லை.
இதுமட்டுமல்ல… டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் அச்சடிக்கும் டெண்டர் தனியாரிடம் கொடுக்கப்படுகிறது. ஒரு பேப்பருக்கு 2.50 முதல் 3.00 ரூபாய் வரை அரசு கொடுக்கும். சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தால், 10 லட்சம் வினாத்தாளுக்கும் கூடுதலாக 25% சதவிகிதம் வினாத்தாள் அச்சடிப்பார்கள். அதற்கும் அரசு பணம் கொடுத்துவிடும். வினாத்தாள்களை ஸ்கேன் செய்யும் வேலையும் தனியாரிடம்தான் கொடுக்கப்படும். அதற்கும் ஒரு பேப்பருக்கு இவ்வளவு ரூபாய் என அரசு வாரி கொடுத்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி பேப்பர் ஸ்கேன் செய்யும் மெஷின், நாசிக்கில் நோட்டு அடிக்கிற மெஷின் போல இருக்கும். மல்ட்டிபிள் ஸ்கேனிங்கில் ஒரு சிறு கோடு என்றால்கூட ரிஜெக்ட் செய்துவிடும். ஸ்கேனிங்கில் கீழ்மட்ட அதிகாரிகள் சிலருடன் கூட்டு சதி நடத்தி கொள்ளையடித்திருக்கலாம். இந்த கோல்மால்களில் தமிழகம் முழுவதும் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சியடைய வைத்துள்ளார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 வினாத்தாள் அச்சடிப்பவரும் ஸ்கேன் செய்பவரும் ஒரே நபர்தான். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை 56, காட்டுப்பாக்கம் பகுதியில் எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் என்ற நிறுவனம் வைத்துள்ளார். இங்கேதான் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களை அச்சடித்து வருகிறார். இவரே ஸ்கேனிங்கும் நடத்திவருகிறார். இந்த செல்வக்குமார் சொகுசு காரில்தான் வலம்வருவார். இவரைக் குறிவைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும். அதிமுக, திமுக விஐபிக்கள் மட்டுமல்ல… எழுத படிக்கத் தெரியாதவர்களும் அரசு வேலைக்குப் போயிருப்பதும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதும் அம்பலமாகும்” என்கிறார்கள் முக்கிய அதிகாரிகள்.�,